ராமநாதபுரத்தில் ரூ.89.71 கோடி மதிப்பில் திறப்பு விழாவிற்கு தயாராகும் 12வது பட்டாலியன் கட்டிடம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சக்கரகோட்டையில் ரூ.89.71 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட தமிழ்நாடு சிறப்பு காவல்துறை 12வது போலீஸ் பட்டாலியன் அலுவலக கட்டிடங்கள், நவீன வசதிகளுடன் கூடிய தங்குமிடம் கட்டிடங்கள் உள்ளிட்டவை அமைக்கும் பணி முடியும் தருவாயில் இருப்பதால் விரைவில் 1,200 போலீசாருடன் துவக்கப்பட உள்ளது. தமிழ்நாடு காவல் துறையை தாலுகா காவல்துறை, ஆயுதப்படை, பட்டாலியன் என மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் முதலாவதான தாலுகா காவல்துறை சட்டம், ஒழுங்கு, குற்ற வழக்குகளை விசாரிக்கக் கூடியது. இவர்கள் காவல் நிலையம் மூலம் பொதுமக்களிடம் நேரடி தொடர்பில் உள்ளவர்கள். இதில் சிபிசிஐடி கிரைம் உள்ளிட்ட பொருளாதார குற்றப்பிரிவு, சிவில் சப்ளையர் என பல பிரிவுகள் உள்ளன.

இரண்டாவதான ஆயுதப்படை மாவட்டத்திற்கு ஒன்று உள்ளது. இவை அந்தந்த எஸ்.பி.யின் கட்டுபாட்டின் கீழ் வருவதால், அவரின் உத்திரவின்பேரில் திருவிழாக்கள், முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு, சிறை கைதிகளை அழைத்து செல்லுதல் உள்ளிட்ட குறிப்பிட்ட பணிகள் வழங்கப்படுகிறது.அடுத்தப்படியாக மூன்றாவதாக உள்ளது தமிழ்நாடு சிறப்பு காவல்துறை மற்றும் ஆயுதம் ஏந்திய காவல்துறை என்ற பட்டாலியன். இது சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கக் கூடியது. கலவரம் உள்ளிட்ட பதட்டமான பிரச்னைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் சென்னை ஆவடி, மணிமுத்தாறு, மதுரை, பழநி, கோவை, திருச்சி, உளுந்தூர்பேட்டை என தமிழ்நாடு முழுவதும் 16 பட்டாலியன்கள் உள்ளது. கலவரத் தடுப்பு, அவசரகால பாதுகாப்பு பணியை தவிர மற்ற பணிகள் இருக்காது. ராமநாதபுரத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம், அக்.27ம் தேதி சிவகங்கையில் மருதுபாண்டியர்கள் நினைவு தினம், அக்டோபர் 28 முதல் 30ம் தேதி வரை கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா, அருகே உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், வெள்ளையத்தேவன், அழகுமுத்துகோன், சுந்தரலிங்கனார், நெல்லை மாவட்டத்தில் பூலித்தேவன், ஒண்டிவீரன் உள்ளிட்ட தலைவர்களில் பிறந்தநாள், நினைவு நாள் கொண்டாடப்படுகிறது.

இதற்காக ராமநாதபுரம்,சிவகங்கை உள்ளிட்ட இந்த மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். மேலும் சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சுமார் 1000 முதல் 8000 வரை போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டம் ஒழுங்கு முன்னேற்பாடு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் காலங்களில் பாதுகாப்பு பணிகளுக்கு பல்வேறு வெளி மாவட்டங்களிலிருந்து பட்டாலியன் போலீசார் வரவழைக்கப்பட்டு காவல்பணியில் ஈடுபடுவது வழக்கம்.

இந்நிலையில் பதட்டமான மாவட்டமாக கருதப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டில் 12வது பட்டாலியன் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள சக்கரக்கோட்டை பஞ்சாயத்து பகுதியில் 79 ஏக்கர் பரப்பளவில் காவலர் வீட்டு வசதிக் கழகம் சார்பில் ரூ.89. 71 கோடி மதிப்பில் அலுவலக கட்டிடங்கள், போலீசார் தங்கும் அறை கட்டிடங்கள் மற்றும் நிர்வாக கட்டிடங்கள் கட்டும் பணி துவங்கப்பட்டது.

அதில் பட்டாலியன் தலைமை கமாண்டர், 3 உதவி கமாண்டர்கள், 6 இன்ஸ்பெக்டர்கள், 30 எஸ்.ஐகள், 300 ஏட்டுகள் என 1,200 போலீசார் தங்கும் அறைகள், வாகன காப்பகம், மைதானம், உடற் பயிற்சி கூடம் மற்றும் குடிநீர், மின்சாரம், சாலை உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டது. இதனை கடந்த செப்டம்பர் மாதம் உள்துறை செயலாளர் பணீந்திரரெட்டி நேரில் ஆய்வு செய்தார். அப்போது அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க உத்திரவிட்டார். இதனை தொடர்ந்து 5 மாதங்களாக பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தது. தற்போது 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றது.

இந்நிலையில் கடந்த வாரம் 3ம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட ஆய்வு பணிக்காக ராமநாதபுரம் வந்திருந்த தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திர பாபு, சக்கரகோட்டையில் ரூ.89.71 கோடி மதிப்பில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 12வது போலீஸ் பட்டாலியன் அலுவலக கட்டிடங்கள், தங்குமிடம் கட்டிடங்கள் விரைவில் 1,200 போலீசாருடன் துவக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

இதற்கு முன்னோட்டமாக நேற்று முன்தினம் சிறப்பு கமாண்டர் ஒருவர் தலைமையில் போலீசார் சோதனை அணிவகுப்பு நடத்தினர். பதட்டமான மாவட்டங்கள் என அறியப்பட்டுள்ள ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் 60 முதல் 100 கிலோ மீட்டர் தூரத்திற்குள் அருகிலுள்ள விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் உட்பட அவசர காலங்களில் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். விரைவில் இந்த ஒருங்கிணைந்த 12வது போலீஸ் பட்டாலியன் மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: