உடுமலை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் வழியாக உடுமலை-மூணாறு சாலை அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் உள்ளன.
இந்த வன விலங்குகள் அடிக்கடி சாலையை கடப்பதால் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை சார்பில் பல்வேறு எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பல விதிமீறல்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. குறிப்பாக, யானைகள் சாலையைக் கடக்கும் போது அதனை புகைப்படம் எடுப்பது, கூச்சலிட்டு கவனத்தை திசை திருப்புவது, ஹார்ன் ஒலி எழுப்புவது, கல் எடுத்து வீசுவது போன்ற செயல்களில் ஒரு சிலர் ஈடுபடுகின்றனர்.
இதனால், யானைகள் ஆக்ரோஷம் அடைந்து அவர்களை தாக்குகிறது. தற்போது, வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால், வன விலங்குகளுக்கு போதுமான அளவில் உணவு, தண்ணீர் கிடைப்பதில்லை. யானைகளுக்கு அதிக அளவில் தண்ணீர் தேவைப்படுவதால் அவை தண்ணீர் தேடி சாலையைக் கடந்து அமராவதி அணைப்பகுதிக்கு வருகிறது.
மேலும், சாலை ஓரங்களிலும், சில நேரங்களில் சாலையிலும் கூட்டமாக யானைகள் முகாமிட்டுள்ளன. அதுபோன்ற சமயங்களில் வாகன ஓட்டிகள் அமைதியாக காத்திருந்து யானைகள் சென்றதும் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தநிலையில் இந்த வனப்பகுதியை அடுத்து கேரள மாநில எல்லைப்பகுதியில் உள்ள மறையூரை அடுத்த நயமாக்காடு பகுதியில் நீண்ட கொம்புகளை உடைய ஒற்றை யானை ஒன்று அடிக்கடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
அந்த பகுதி மக்கள் அதற்கு படையப்பா என்று பெயர் சூட்டியுள்ளார். உடுமலையிலிருந்து நேற்று காலை மூணாறு சென்ற அரசு பேருந்தை சாலையில் நின்ற படையப்பா வழிமறித்துள்ளது. இதனால், அச்சமடைந்த டிரைவர் பேருந்தை நிறுத்தியுள்ளார். ஆனால், திடீரென பேருந்தை நோக்கி வந்த யானை பேருந்தை தந்தத்தால் தாக்கியுள்ளது.
இதில், பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. பின்னர், பேருந்தை தும்பிக்கையால் தள்ள முயற்சித்த யானை, முடியாத நிலையில் மீண்டும் வனப்பகுதிக்கு திரும்பி சென்றது. இதனால், நிம்மதிப் பெருமூச்சு விட்ட பயணிகள் விரைவாக பேருந்தை எடுக்குமாறு டிரைவரை வலியுறுத்தினர்.அரசு பேருந்தை யானை தாக்கிய சம்பவத்தை பேருந்துக்குள் இருந்த பயணிகள் வீடியோ எடுத்துள்ளனர். அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.