×

கூட்டணி தொடரும்!: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் பற்றி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கவில்லை.. ஜெயக்குமார் பேட்டி..!!

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் பற்றி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான பணிகளை ஒருமாதத்தில் தொடங்க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை தொடங்க மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டத்துக்கு பின் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

பொதுச்செயலாளர் தேர்தல் பற்றி விவாதிக்கவில்லை:

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் பற்றி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கவில்லை. அதிமுகவின் வளர்ச்சி குறித்து மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்றார்.

பாஜகவுடன் கூட்டணி தொடருகிறது:

அதிமுக - பாஜக இடையே எந்த மோதல் போக்கும் இல்லை. மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி; தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான  கூட்டணி தொடரும் என கூறினார். தனது செயல்பாட்டில் துளிகூட மாற்றிக் கொள்ளப்போவது இல்லை என அண்ணாமலை கூறிய நிலையில் அதிமுக செயல்பாட்டில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் வெளியானது நிர்வாகிகளின் தனிப்பட்ட கருத்து என்றும் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

ஓபிஎஸ் கட்சி நடத்தவில்லை; கடைதான் நடத்துகிறார்:

ஓபிஎஸ் கட்சி நடத்தவில்லை; கடைதான் நடத்தி வருகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார். அதிமுக கொடி, லெட்டர்பேடை ஓபிஎஸ் பயன்படுத்துவது பற்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

வானதி பேச்சு: ஜெயக்குமார் பதில்

வானதி சீனிவாசன் பாஜக வளர்ச்சிக்காக பேசி உள்ளார். தமிழ்நாட்டில் அதிமுக வல்லரசாக உள்ளது என ஜெயக்குமார் தெரிவித்தார். பாஜக இல்லாமல் இன்றைக்கு தமிழ்நாட்டில் அரசியல் முடிவுகள், நிகழ்வுகள் நடக்காது என வானதி தெரிவித்திருந்தார்.

அண்ணாமலை கருத்தை விமர்சிக்க விரும்பவில்லை:

தாய், மனைவியை உயர்த்தி பேசுவது அண்ணாமலையின் தனிப்பட்ட கருத்து என ஜெயக்குமார் தெரிவித்தார். பாஜக தலைவர் அண்ணாமலையின் தனிப்பட்ட கருத்து குறித்து விமர்சிக்க விரும்பவில்லை என கூறினார்.

ஆன்லைன் ரம்மிக்கு தடை தேவை:

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்பது தான் அதிமுகவின் நிலைப்பாடு என்றார்.

பாஜகவிடம் பணிந்து போகிறதா அதிமுக?

நேற்று வரை அண்ணாமலையை கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பின் நேரடியாக விமர்சிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு செல்லும் முன்பு வரை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அண்ணாமலையை ஆவேசமாக விமர்சித்தனர். ஆலோசனை கூட்டத்துக்கு பின் பாஜகவுக்கு எதிரான அதிமுக நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருந்த நிலையில் ஜெயக்குமார் கண்டனம் தெரிவிக்க கூட மறுத்துவிட்டார்.

உரிய நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்:

உரிய நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும் என்று ஜெயக்குமார் கூறினார்.


Tags : AIADMK ,Jayakumar , AIADMK general secretary election, district secretaries meeting, Jayakumar
× RELATED வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்:...