பரமக்குடி: மாணவி பாலியல் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி பரமக்குடியில் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில், பரமக்குடி அதிமுக கவுன்சிலர் சிகாமணி உள்ளிட்டோர் கைதாயினர். இவ்வழக்கில் அதிமுகவை சேர்ந்த மேலும் சிலருக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும். வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, ஆயிர வைசிய சபை சார்பில் பரமக்குடியில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து கடைகள் அடைக்கப்பட்டன. பரமக்குடி நகரில் உள்ள அனைத்து வியாபாரிகளும், ஊழியர்களும் பொதுமக்களை திரட்டி காந்தியின் சிலை முன்பு கண்டன உரையாற்றி, கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.