×

வறட்சியின் பிடியில் அணை: சிறுவாணிக்கு மாற்றாக பில்லூர் குடிநீர்

கோவை: கோவை சிறுவாணி அணையின் மூலமாக நகரில் சுமார் 3 லட்சம் குடிநீர் இணைப்புகளுக்கு குடிநீர் சப்ளையாகி வருகிறது.அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 15 மீட்டர். இதில் இன்னும் 4.42 மீட்டர் மட்டுமே குடிநீர் இருப்பு இருக்கிறது. அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. தினமும் 5.5 கோடி லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது.

இதே அளவிற்கு தொடர்ந்து குடிநீர் எடுத்தால், வரும் ஏப்ரல் மூன்றாவது வாரம் வரை மட்டுமே குடிநீர் வழங்க முடியும். அதற்கு பிறகு அணையில் குடிநீர் எடுக்க முடியாது. அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தால் மட்டுமே அணையின் வறட்சி நிலைமையை தவிர்க்க முடியும். அணையில் 4 வால்வுகள் இருக்கிறது.

தற்போது கடைசி வால்வு மூலமாக குடிநீர் பெறப்படுகிறது. 3 வால்வுகள் நீர்மட்டத்திற்கு மேலே சென்று விட்டது. அணையின் கடைசி நீர் மட்டம் 863.40 மீட்டர் (கடல் மட்ட உயர கணக்கு படி) ஆகும். இந்த அளவிற்கு கீழ் 2.5 மீட்டர் ஆழத்திற்கு பழங்கால தடுப்பணை இருக்கிறது. இந்த தடுப்பணை 70 ஆண்டிற்கு முன் கட்டப்பட்டு, 2 ஆண்டிற்கு முன் கான்கிரீட் தளம் போட்டு மூடப்பட்டது. இந்த தடுப்பணையில் 15 நாளுக்கு குடிநீர் பெற முடியும்.

கடந்த 10 ஆண்டில் இந்த தடுப்பணையில் இருந்து 4 முறை குடிநீர் பெறப்பட்டது. குறிப்பாக வறட்சி உச்சகட்டமாக இருக்கும் மே மாத காலத்தில் இந்த பழங்கால தடுப்பணையில் இருந்து  தான் குடிநீர் பெற்று வழங்கப்பட்டது. இதை கேரள அரசின் நீர் பாசனத்துறை மூடி விட்டது. இதை பயன்பாட்டிற்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யவில்லை.

தமிழக அரசு இந்த பழங்கால தடுப்பணையை பழைய நடைமுறைப்படி பயன்பாட்டிற்கு கொண்டு வர கடிதம் அனுப்பியது. ஆனால் கேரள அரசு எந்த ஒப்புதலும் வழங்கவில்லை. அணை வறட்சி நிலைமையில் இருக்கும் போது பழங்கால தடுப்பணை கான்கிரீட் உடைக்கப்பட்டு டணல் மூலமாக குடிநீர் பெற வழிவகை செய்ய வேண்டும் என கோவை  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிநீர் வாரியத்தினர் கூறுகையில், ‘‘ வழியோர கிராமங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு குடிநீர் வழங்கப்படுகிறது. சில பகுதியில் தொண்டாமுத்தூர், பேரூர் திட்டத்தில் கூடுதல் குடிநீர் சப்ளை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பில்லூர் குடிநீர் திட்டத்தில் உள்ள குடிநீரை சிறுவாணி வினியோக பகுதிகளுக்கு மாற்றி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக சிறுவாணி பகுதியில் குடிநீர் பற்றாக்குறை தவிர்க்கப்படும். சிறுவாணி அணையில் வறட்சி காலத்தில் கூடுதல் குடிநீர் பெற, மாற்று திட்டங்களின் மூலமாக கூடுதல் தண்ணீர் பெற வாய்ப்பு எதுவுமில்லை, ’’ என்றனர்.

Tags : Siruvani , Dam in grip of drought: Pillur potable water as an alternative to Siruvani
× RELATED கோவை மாவட்டம் சித்திரைச்சாவடி அணைக்கட்டில் வெள்ளப்பெருக்கு