×

வாகனம் மூலம் உணவு பொருள்களை குடோன்களுக்கு கொண்டு செல்லும் 75 டெண்டர்கள் ரத்து: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம், உணவு பொருட்களை மாவட்ட கிட்டங்கிகள், அமுதம் அங்காடிகளுக்கு கொண்டு செல்வதற்காக வாகனங்களை பணியமர்த்துவது தொடர்பாக டெண்டர்களை ஒப்பந்ததாரர்களிடம் கோரியது. அனைத்து மாவட்டங்களுக்கும் சேர்த்து 75 டெண்டர்கள் கோரப்பட்டன. இந்த டெண்டர்களுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை வழக்கறிஞர் நதியழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் 75  வழக்குகள் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுக்களில்,இரண்டு கோடி ரூபாய்க்கு மேலான பணிகளுக்கான டெண்டருக்கு விண்ணப்பிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும். ஆனால், அதை மீறி 14 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த டெண்டரில் அனுபவமில்லாத நிறுவனங்ளும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளதால், இந்த டெண்டர்களை ரத்து செய்து, புதிதாக டெண்டர்கள் கோர உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த டெண்டர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தரப்பில், டெண்டரில் பங்கேற்க போதுமான அளவில் எவரும் முன் வராததாலும், மனுவில் எழுப்பியுள்ள பிரச்னைகளை கருத்தில் கொண்டும், 75 டெண்டர் அறிவிப்புக்களையும் திரும்பப் பெற்றுள்ளோம். விரைவில் புதிய டெண்டர் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.



Tags : Tamilnadu government ,ICourt , Cancellation of 75 tenders for transporting food items by vehicle to godowns: Tamilnadu govt informs ICourt
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...