நீரிழிவு மற்றும் தலசீமியாவால் பாதிக்கப்பட்ட ஏழைக்குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளிப்பதற்காக சன் பவுண்டேஷன் 34 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாக, ஏழை எளியோரின் கல்வி, மருத்துவ சிகிச்சை, சமூக மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் மற்றும் சன் டி.வி. பல்வேறு அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நீரிழிவு மற்றும் தலசீமியா உள்ளிட்ட பாதிப்புகள் உள்ள குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளிப்பதற்காக சன் பவுண்டேஷன் 34 லட்சத்து 29 ஆயிரத்து 500 ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது.
இதற்கான காசோலையை, தரமணியில் உள்ள விஎச்எஸ் (VHS) மருத்துவமனை நிர்வாகிகள் சுரேஷ் சாரி, அனிதா கிளைட்டந் ஆகியோரிடம் சன் பவுண்டேஷன் சார்பில் திருமதி காவேரி கலாநிதி மாறன் வழங்கினார். ஏழை எளியோருக்கு கல்வி, அடிப்படைக் கட்டமைப்புகள் மற்றும் கற்றல் சூழலை மேம்படுத்துதல், தரமான இலவச சிகிச்சை, மகளிர் மற்றும் இளைஞர் நலன், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக சன் டிவியும் சன் பவுண்டேஷனும் தொடர்ந்து நிதி உதவி அளித்து வருகின்றன. இத்திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் மற்றும் சன் டி.வி. இணைந்து இதுவரை179 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
