×

ஒன்றிற்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்பு விவகாரம் சமூகவலைதளங்களில் பரவும் கருத்து தவறானது: மின்வாரியம் அறிவிப்பு

சென்னை: ஒரே வீட்டில் ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றிற்கும் மேற்பட்ட வீட்டு மின்இணைப்புகள் ஒன்றிணைக்கப்படுவதற்காகவே ஆதார் எண் பெறப்பட்டு மின்இணைப்புடன் இணைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது என்ற கருத்து முற்றிலும் தவறானது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் இதுவரை 99 சதவீதத்திற்கும் மேல் வீடு, குடிசை மற்றும் விவசாய மின்னிணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களில் சமூக வலைதளங்களில், ஒரே வீட்டில் ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றிற்கும் மேற்பட்ட வீட்டு மின்இணைப்புகள் ஒன்றிணைக்கப்படுவதற்காகவே ஆதார் எண் பெறப்பட்டு மின்இணைப்புடன் இணைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது என்ற கருத்து பதியப்பட்டு பரவி வருகிறது.

இந்த கருத்து முற்றிலும் தவறானது/ தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி வெளியிடப்பட்ட வீதப்பட்டியல் மாற்ற ஆணையின் சரத்துக்களின்படி, கள ஆய்வின் அடிப்படையில் ஒரே வீட்டில், குடியிருப்பில், ஒரே நபரின் பெயரில் ஒரு குடும்பத்தினரே உபயோகிக்கும் ஒன்றிற்கும் மேற்பட்ட வீட்டு மின்னிணைப்புகளை ஒன்றிணைக்க அல்லது அத்தகைய கூடுதல் மின்னிணைப்புகளைப் பொதுப்பயன்பாட்டிற்கான மின்னிணைப்பாக மாற்ற உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும், சில நிர்வாக காரணங்களால் மேற்படி ஒன்றிணைப்பு, வீதப்பட்டியல் மாற்றும் பணி  தொடங்க கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பான எந்த ஒரு செயல் உத்தரவும் மின்பகிர்மான வட்டங்களிலுள்ள பிரிவு அலுவலகங்களுக்கு பிறப்பிக்கப்படவில்லை. எனினும் இக்குறிப்பிட்ட கள ஆய்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பிரிவு அலுவலரின் கடித வரைவு செயல், ஒரு தனிப்பட்ட நிகழ்வு ஆகும். இதில் சம்பந்தப்பட்ட அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Tags : Electricity Board , More than one house power connection issue on social media is wrong: Electricity Board notice
× RELATED ஐ.டி.காரிடர் கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: நாளை நடக்கிறது