பாஜவில் தோசை சுடவா அண்ணாமலை இருக்கிறார்?: அதிமுக ஐடி விங்க் வெளியிட்ட வீடியோ வைரல்

சென்னை:  பாஜ நிர்வாகிகள் பலர் வரிசையாக அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதனால் அதிமுக- பாஜ இடையிலான மோதல் தற்போது முற்றி உள்ளது. பாஜ நிர்வாகிகளை இப்படி அதிமுக தங்கள் பக்கம் தூக்கியதை பாஜ தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். இதுகுறித்து, அண்ணாமலை அளித்த பேட்டியில், ‘நான் தோசை சுடவோ, இட்லி சுடவோ வரவில்லை. பாஜகவின் மேனேஜராக இருக்க வரவில்லை. நான் அரசியல் செய்ய வந்து இருக்கிறேன். அதை செய்வேன். கலைஞர்.. ஜெயலலிதா போல முடிவு எடுப்பேன். நான் தலைவன்.. நான் யாருக்கும் கவலைப்பட மாட்டேன். நான் தலைவரை போல சில முடிவுகளை எடுப்பேன். நான் எதை பற்றியும் கவலைப்படாமல் முடிவு எடுப்பேன்.

என்னை டெல்லி மாற்றிவிடும் என்ற பயத்தில் முடிவு எடுக்காமல் இருக்க மாட்டேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.  இந்நிலையில், அண்ணாமலை கூறிய தோசை கமென்டிற்கு பதிலடியாக, அதிமுக ஐடி விங் சார்பாக வீடியோ ஒன்று இணையத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளது. அதில் பாஜ தலைவர் அண்ணாமலை, உண்மையிலேயே பிரசாரத்தின் போது தோசை சுட்ட காட்சிகளை பதிவேற்றி உள்ளனர். உள்ளாட்சி தேர்தலின் போது பாஜ தலைவர் அண்ணாமலை, தோசை சுட்டு பிரசாரம் செய்தார். அதை தான் இப்போது தோசை சுட மட்டுமே தமிழக பாஜவில் அண்ணாமலை இருப்பது போன்று அவரது பேட்டி வீடியோவையும், தோசை சுட்ட வீடியோவையும் இணைத்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.

Related Stories: