×

அனைத்து மாநகராட்சிப் பகுதிகளிலும் தினமும் குடிநீர் வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்: அமைச்சர் கே.என்.நேரு அறிவுரை

சென்னை: அனைத்து மாநகராட்சிப் பகுதிகளிலும், தினமும் குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்று ஆணையாளர்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு ஆய்வுக் கூட்டத்தில் அறிவுரை வழங்கினார்.  அனைத்து மாநகராட்சிகளின் (சென்னை நீங்கலாக) ஆணையர்களுடன் மாநகராட்சிப்  பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளின் நிலை குறித்த  ஆய்வுக் கூட்டம் சென்னை நகராட்சி நிருவாக ஆணையரக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்து ஆணையர்கள் மத்தியில் பேசியதாவது: மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த 20 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் பொதுமக்களை சரியாக சென்றடைந்துள்ளதா என்பதை தொடர்ந்து ஆய்வு செய்து வர வேண்டும். மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை அமைப்புப் பணிகள், பாதாள சாக்கடை திட்டப் பணிகள், மழைநீர் வடிகால் அமைப்புப் பணிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் எந்தவித தொய்வுமின்றி மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து மாநகராட்சிப் பகுதிகளிலும் தினந்தோறும் குடிநீர் வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட மாநகராட்சி ஆணையாளர்கள் முனைப்போடு மேற்கொள்ள வேண்டும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதன் படி நகர்ப்புறங்களில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்தும் பணிகள் தொய்வின்றி மேற்கொள்ளப்பட வேண்டும். அனைத்துப் பகுதிகளிலும் சீரான குடிநீர் விநியோகம் இருப்பதை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் குடிநீரின் தரத்தினை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.  எதிர்வரும் கோடை காலத்தில் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். திடக்கழிவு மேலாண்மை செயலாக்கத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் விழிப்புணர்வுப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார். தூய்மை இந்தியா திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய கோவை மற்றும் திருச்சி மாநகராட்சி ஆணையாளர்களைப் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.




Tags : Minister ,KN Nehru , Daily drinking water supply should be expedited in all corporation areas: Minister KN Nehru advises
× RELATED தொடர்ந்து தமிழகத்திற்கு வரும்...