பாகிஸ்தானில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற இம்ரான்கான் ஆதரவாளர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

லாகூர்: பாகிஸ்தானில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற இம்ரான் கான் ஆதரவாளர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், பீரங்கி மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்தும் தாக்குதல் நடத்தினர். நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானில் பேரணி உள்ளிட்டவற்றுக்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தடை விதித்துள்ளார். இந்நிலையில், இம்ரான் கானின் ஆட்சியின்போது கலைக்கப்பட்ட பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மாகாண சட்டபேரவைகளுக்கு ஏப்ரல் மாதம் 30ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரி-இ-இன்சாப் கட்சியை சேர்ந்த தொண்டர்கள், இம்ரான் கான் ஆதரவாளர்கள் தேர்தல் பிரசார பேரணியை நடத்த திட்டமிட்டனர்.

பேரணி நடத்த அரசு தடை விதித்துள்ள நிலையில், இம்ரான் கான் ஆதரவாளர்கள் தேர்தல் பிரசார பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறி, தெஹ்ரி-இ-இன்சாப் கட்சியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட திரளான தொண்டர்கள் லாகூரில் உள்ள இம்ரான் கான் வீட்டின் முன் கூடி, பேரணி செல்ல ஆயத்தமாகினர். அப்போது அவர்கள் மீது போலீசார்  தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். இதில் பலர் காயமடைந்தனர். ஜமான் பூங்கா என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த தெஹ்ரி-இ-இன்சாப் கட்சியினரின் வாகனங்களையும் போலீசார் அடித்து நொறுக்கினர். போலீசாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த பத்திரிகையாளர்களும் கடுமையாக தாக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியே கலவர பூமியாக காட்சியளித்தது.

Related Stories: