×

ஈரானில் வெடித்தது போராட்டம் 5 ஆயிரம் மாணவிகளுக்கு விஷம் கொடுத்தது எப்படி? விசாரணை நடத்த ஐநா வேண்டுகோள்

துபாய்: ஈரானில் 5 ஆயிரம் பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுத்த விவகாரத்தில் விசாரணை நடத்தும்படி ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே உள்ள கோம் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் முதல்  பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் பலர் அடுத்தடுத்து, உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மருத்துவ பரிசோதனையில் மாணவிகளின் உடலில் விஷம் கலந்து இருந்தது தெரிந்தது. மத  அடிப்படைவாதிகளால் பள்ளி செல்வதை தடுக்கும் வகையில் மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

சர்வதேச அளவில் இவ்விவகாரம் பேசப்பட்ட நிலையில், தற்போது ஈரான் அரசு விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. இதையடுத்து ஈரான் கல்வி அமைச்சகம் முன் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி அரசுக்கு எதிராக போராட்டங்களை  நடத்தினர். ஏற்கனவே முஸ்லீம் பெண்கள் அணியும் ஹிஜாப் விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன் ஈரான் அரசை முடக்கிய நிலையில், தற்போது மாணவிகளுக்கு  விஷம் கொடுத்த விவகாரம் பூதாகரமாகி உள்ளது. இந்த விவகாரத்தில் தற்போது ஐநா தலையிட்டு உள்ளது. ஐநா கலாச்சார அமைப்பு இதுகுறித்து கவலை தெரிவித்து உள்ளது. மேலும் இதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஐநா கலாச்சார அமைப்பு தலைவர் ஆட்ரி ஆசோலே கூறுகையில்,’ பள்ளிகளைப் பாதுகாப்பதற்கும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நல்ல சிகிச்சை அளிக்கவும், இந்த விவகாரத்தில் உண்மையை கண்டறியவும் முழுமையான விசாரணை தேவை. இதுகுறித்து ஈரான் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் கடந்த மூன்று மாதங்களில் ஈரானில் பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து நான் மிகவும் கவலையடைந்துள்ளேன். இது அவர்களின் பாதுகாப்பான கல்விக்கான உரிமையை மீறுவதாகும்’ என்று தெரிவித்து உள்ளார்.

Tags : Iran ,UN , How did the protests in Iran poison 5,000 female students? UN request to investigate
× RELATED இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய...