×

4வது டெஸ்ட் இன்று தொடக்கம் நம்பர் 1 ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? ரோகித்துக்கு நெருக்கடி; ஸ்மித் மற்றும் கோ உற்சாகம்

அகமதாபாத்: இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட், மோடி ஸ்டேடியத்தில் இன்று காலை 9.30க்கு தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நாக்பூர், டெல்லியில் நடந்த முதல் 2 டெஸ்டிலும் அபாரமாக வென்ற இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன், கோப்பையையும் தக்கவைத்துக் கொண்டது. அடுத்து இந்தூரில் நடந்த 3வது டெஸ்டில் இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெற்று ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்டது.

சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் ரன் குவிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறியதால், ஹோல்கர் ஆடுகளமும் அதே வகையில் அமைக்கப்பட்டது. எனினும், யாரும் எதிர்பாராத வகையில் மேத்யூ குனேமன், நாதன் லயன் சுழலில் சிக்கி சின்னாபின்னமான இந்தியா முதல் இன்னிங்சில் 109 ரன்னுக்கும், 2வது இன்னிங்சில் 163 ரன்னுக்கும் சுருண்டது. ஸ்மித் தலைமையில் உறுதியுடன் போராடிய ஆஸ்திரேலிய அணி அந்த போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்ததுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது. இந்த நிலையில், 4வது மற்றும் கடைசி டெஸ்ட் அகமதாபாத்தில் இன்று தொடங்கி நடைபெறுகிறது.

உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயாரின் உடன் இருப்பதற்காக நாடு திரும்பிய கம்மின்ஸ் மீண்டும் இந்தியா வருவது தாமதமாவதால், இந்த டெஸ்டிலும் ஆஸி. அணி ஸ்மித் தலைமையிலேயே விளையாடுகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பை உறுதி செய்துவிட்டதால், ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியில் மிகுந்த தன்னம்பிக்கையுடன், எந்தவித பதற்றமும் இல்லாமல் களமிறங்குகிறது. ஆஸ்திரேலியாவின் லயன், குனேமன், மர்பி சுழல் கூட்டணி சரியான சவாலாக உறுவெடுத்திருப்பதால், இந்திய அணி நிர்வாகம் பேட்டிங் வரிசை மற்றும் பந்துவீச்சு வியூகத்தை தீர்மானிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது.

அகமதாபாத்தில் வெற்றியை வசப்படுத்தி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றுவதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு கம்பீரமாக முன்னேறும் முனைப்புடன் ரோகித் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. வழக்கம்போல அஷ்வின், ஜடேஜா, அக்சர் சுழல் கூட்டணி நம்பிக்கை அளித்தாலும், முன்னணி பேட்ஸ்மேன்கள் கணிசமாக ரன் குவித்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்பதில் சந்தேகமில்லை. இரு அணிகளுமே வெற்றிக்காக வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பதும் உறுதி.

இந்தியா: ரோகித் (கேப்டன்), கே.எல்.ராகுல், ஆர்.அஷ்வின், ஸ்ரீகர் பரத், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் அய்யர், ஜடேஜா, கோஹ்லி, குல்தீப், ஷமி, சிராஜ், அக்சர், புஜாரா, கில், ஜெய்தேவ் உனத்கட், சூரியகுமார், உமேஷ்.
ஆஸ்திரேலியா: ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, கேமரான் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷேன், நாதன் லயன், லேன்ஸ் மோரிஸ், டாட் மர்பி, மேட் ரென்ஷா, மிட்செல் ஸ்டார்க், மேத்யூ குனேமன், ஸ்காட் போலண்ட்.

* மோடி ஸ்டேடியத்தில் கடைசியாக நடந்த 2 டெஸ்டில் வீழ்ந்த 60 விக்கெட்டுகளில், சுழற்பந்துவீச்சாளர்கள் 48 விக்கெட்டை சாய்த்துள்ளனர்.
* அக்சர் படேல் இங்கு மொத்தம் 20 விக்கெட் கைப்பற்றி (3 முறை 5 விக்கெட்) முத்திரை பதித்துள்ளார்.
* நட்சத்திர வீரர் கோஹ்லி கடைசியாக விளையாடிய 15 இன்னிங்சில் (டெஸ்ட்) ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை என்பது கவலை தரும் புள்ளி விவரமாக அமைந்துள்ளது.
* நடப்பு தொடரின் முதல் 3 டெஸ்டில், இந்திய அணி பின்வரிசை பேட்ஸ்மேன்கள் (7-11) கடுமையாகப் போராடி 403 ரன் சேர்த்து சிறப்பாகப் பங்களித்துள்ளனர் (சராசரி 25.18 ரன்). அதே சமயம் ஆஸி. பின்வரிசை 140 ரன் மட்டுமே சேர்த்துள்ளது (சராசரி 6.36 ரன்).

* டாஸ் போடுகிறார் பிரதமர் மோடி!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளிடையே அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கும் 4வது டெஸ்ட் போட்டியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஆஸி. பிரதமர் அந்தோனி அல்பனீஸ் நேரில் பார்த்து ரசிக்க உள்ளனர். மேலும், இந்த போட்டியை பிரதமர் மோடி டாஸ் போட்டு தொடங்கி வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1,32,000 இருக்கைகள் கொண்ட ஸ்டேடியம் நிரம்பி வழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : India ,Australia ,Rohit ,Smith , Will India retaliate against No. 1 Australia in 4th Test today? Crisis for Rohit; Smith and co are excited
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!