×

எந்த இடத்திலும் மழைநீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி அதிரடி சென்னையில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளிலும் மழைநீர் வடிகால் பணிகள்: மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைக்கும் பணியும் தீவிரம்

சென்னை: சென்னையில் வரும் மழைக் காலங்களில் எந்த ஒரு இடத்திலும் மழைநீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளிலும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக் காலம் தொடங்கினாலே, சென்னைவாசிகளுக்கு ஒருவித பயம் ஏற்பட்டுவிடும் என்றே சொல்லலாம். ஏனென்றால், சென்னை சாலைகள் சிறிய மழைக்கே குளங்களைப் போல காட்சியளிக்க தொடங்கும்.

கடந்த பல ஆண்டுகளாகவே சென்னையில் இதேநிலைதான் தொடர்ந்தது. 2015 சென்னை பெருவெள்ளம் தொடங்கி அடுத்தடுத்து ஏற்பட்ட புயல் பாதிப்புகளில் நிலைமை எந்தளவுக்கு மோசமானது என்று தனியாகச் சொல்ல வேண்டியது இல்லை. சிறு மழைக்கே குண்டும் குழியுமாக இருந்த சாலைகளால் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சென்னைவாசிகளுக்கு மழைக் காலம் என்றால் ஒரு அலர்ஜியாகவே மாறிவிட்டது என்றே சொல்லலாம். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் தொடங்கும் வடகிழக்கு பருவமழையால் தான் சென்னைக்கு அதிக மழை கிடைக்கும். இந்த காலத்தை பெரியளவில் சிக்கல் இல்லாமல் கடக்க வேண்டும் என்பதே சென்னைவாசிகளின் விருப்பமாக இருக்கும். தேர்தல் காலத்திலும் இது எதிரொலித்தது. குறிப்பாக, திமுக தனது தேர்தல் பிரசாரத்தின் போதே, சென்னையில் மழை காலங்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுப்போம் என்று உறுதியளித்தது.  

அதன் அடிப்படையில், திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், சென்னை முழுவதும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் முழுமூச்சில் நடந்தது. இந்த திட்டத்துக்கு பெரிய அளவில் வெற்றி கிடைத்தது என்றே சொல்லலாம். ஏனென்றால், கடந்த வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் சென்னையில், மழை வெளுத்து வாங்கியது. அப்போது தாழ்வான பகுதிகளில் கூட மழைநீர் தேங்குவது தடுக்கப்பட்டது. இது சென்னை மக்களுக்கு பெரிய ஆச்சரியத்தை தந்தது. மழைநீர் வடிகால் முழுமையாக முடியாத பகுதிகளில் மட்டுமே சில இடங்களில் மழைநீர் தேங்கியது. அதுவும்கூட, சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கையின் மூலம் உடனுக்குடன் அகற்றப்பட்டது.

சென்னையில் எப்போது மழை பெய்தாலும் சென்னைவாசிகள் கடும் பாதிப்புக்குள்ளாகுவதை தான் பார்த்திருப்போம். மேலும் சாலைகளில் முட்டளவு மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து செல்லும். இதுபோன்ற நேரங்களில் போக்குவரத்து பாதிக்கப்படும். ஆனால், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டதன் எதிரொலியாக இந்த பாதிப்பு சென்னையில் வெகுவாக குறைந்ததை பார்த்து அனைத்து தரப்பு மக்களும் திமுக ஆட்சிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில், கடந்த வடகிழக்கு பருவமழையின் போது மழைநீர் தேங்கிய சில இடங்களும் ஆய்வு செய்யப்பட்டது.

அந்த பகுதிகள் அதிகமாக தாழ்வாக இருப்பதால் மழைநீர் வடிகால் அமைத்தாலும் தேங்கிய நீர் வெளியேறுமா என்ற நிலை உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் மழைநீர் வெளியேற்றுவது குறித்து சென்னை மாநகராட்சி ஆலோசித்து வருகிறது. மேலும், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளிலும் மழைநீர் தேங்குவதை தடுப்பதற்காக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, சென்னையில் பெரும்பாலான இடங்கள் கான்கிரீட் மற்றும் தார் சாலைகளால் மூடப்பட்டுள்ளதால் மழைநீர் பூமிக்கு செல்வது வெகுவாக தடுக்கப்பட்டுள்ளது.

இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறையும் வாய்ப்புள்ளது. இதை தடுக்கும் விதமாக மழைநீரை பூமி உறிஞ்சுவதற்கான திட்டங்களை செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, ஏற்கனவே உள்ள மழைநீர் சேகரிப்பு திட்டத்துடன் மழைநீரை உறிஞ்சும் வகையிலான ‘மழைநீர் உறிஞ்சு பூங்காக்கள்’ அமைக்கும் பணிகளையும் மாநகராட்சி வேகப்படுத்தியுள்ளது. இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைளின் மூலம் சென்னையில் வரும் காலங்களில் மழைநீர் தேங்குவது பெரிய அளவில் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது: வரும் காலங்களில் சென்னை மாநகராட்சியில் எந்தவொரு இடத்திலும் வெள்ள பாதிப்பால் நீர் தேங்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதற்காக மாநகராட்சி சார்பில் குறிப்பிட்ட 5 திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. முதலில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மழைநீர் வடிகால்களில் ஒரு மணி நேரத்திற்கு 40 மிமீ அளவுக்கு மட்டுமே மழை நீர் செல்லும் வகையில் இருந்தது. இப்போது அது சீர்படுத்தப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு 60 முதல் 70 மிமீ வரையிலான மழைநீர் செல்லும் வகையில் வடிகால்களை அமைத்துள்ளோம். அடுத்த திட்டமாக மாநகராட்சியில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க அந்த பகுதிகளிலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

முன்பெல்லாம், மழை காலத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகளை தொடங்குவார்கள். ஆனால், கடந்தாண்டு இந்த பணிகளை நாங்கள் 5 மாதங்களுக்கு முன்பே தொடங்கினோம். 4வதாக, சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தடுக்க திருப்புகழ் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தரும் பரிந்துரை அடிப்படையில் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். 5வது திட்டமாக மழைநீர் சேகரிப்பு மூலம் நிலத்தடி நீரை அதிகரிக்க மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைக்கும் பணிகளையும் தொடங்கியுள்ளோம். இதன் மூலம் வரும் காலங்களில் மழை வெள்ள பாதிப்பு சென்னையில் மேலும் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

* 126 இடங்கள் தேர்வு
சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் என்பதால் மழை நீரானது வெறும் 3 சதவீதம் மட்டுமே பூமிக்குள் செல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. அந்த அளவுக்கு நிலப்பகுதிகள் கட்டிடங்கள் மற்றும் சாலை, கான்கிரீட் சாலைகளால் மூடப்பட்டுள்ளது. எனவே, மழைநீர் சேகரிப்புக்கு வலு சேர்க்கும் வகையில் சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சியாக ‘ஸ்பாஞ்ச் பார்க்’ எனப்படும் உறிஞ்சி பூங்காக்களை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளது. இத்தகைய மழைநீர் சேகரிப்பு பூங்காக்கள் இங்கிலாந்தின் மான்செஸ்டர் உள்பட பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. இவை வெள்ள பாதிப்பு நிறைந்த பகுதிகளில் தடுப்பானாகவும் செயல்பட்டு வெள்ளநீர் வடிகால்களில் செல்லும் நீரின் வேகத்தை குறைக்கிறது. அதுமட்டுமின்றி படிப்படியாக வெள்ளநீர் வடிந்து செல்லவும் உதவுகின்றன. சென்னை மாநகரில் இந்த வகையான ஸ்பாஞ்ச் பூங்காக்களை அமைக்க 126 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.


Tags : Municipal Corporation ,Chennai , Municipal Corporation is taking action to prevent rainwater from stagnating at any place Rainwater drainage works in expanded areas in Chennai: The work of setting up rainwater absorbing parks is also intensive.
× RELATED அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி