×

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.3.49 கோடி திட்டப்பணி முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.61.98 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலப் பணிகளையும் பார்வையிட்டார். கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வில்லிவாக்கம் ரயில்வே சந்திக்கடவில் ரூ.61.98 கோடி மதிப்பீட்டில் வில்லிவாக்கம் சந்திக்கடவுக்கு  மாற்றாக வடக்கில் கொளத்தூர் பிரதான சாலையையும் தெற்கில் ஐ.சி.எப். சாலையையும் இணைக்கும் வண்ணம் புதியதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை முதல்வர் பார்வையிட்டார்.

பின்னர், வில்லிவாக்கம் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் நடைபாதை, சிறுவர் விளையாட்டுத் திடல், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம், குடிநீர் வசதி, மரம், செடி மற்றும் புல்வெளி அமைத்தல், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலான கழிப்பறை, மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு, கண்காணிப்பு கேமராக்கள் ஆகிய வசதிகளுடன் புதியதாக அமைக்கப்பட உள்ள பூங்காவிற்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, கொளத்தூர் 65வது வார்டு பூம்புகார் நகர் 28வது தெருவில் ரூ.69.20 லட்சம் மதிப்பீட்டில் திருவீதியம்மன் கோயில் குளத்தை தூர்வாரி, அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு வசதி, நடைபாதை, யோகா மேடை மற்றும் திறந்தவெளி ஆண்கள் உடற்பயிற்சி மையம் ஆகியவற்றை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

பின்னர், மழைக்காலங்களில் வீனஸ் நகர் மற்றும் செல்வி நகர் பகுதிகளில் நீர்தேங்கா வண்ணம் ரூ.2 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு மழைநீர் வெளியேற்றும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மழைநீர் வெளியேற்று நிலையமும் தலா 1.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு மழைநீர் தேங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நீரை அகற்ற ஒவ்வொரு தொட்டியிலும் 100 குதிரைத்திறன் கொண்ட இரண்டு நீர்மூழ்கி மோட்டார்கள் பொருத்தப்பட்டு மோட்டார் அறைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய இரண்டு நீரேற்று நிலையங்களை திறந்து வைத்து, குடியிருப்பு நலச் சங்கத்தினரிடம் நீரேற்று நிலையங்களுக்கான சாவிகளை வழங்கினார்.

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு மருத்துவ உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இஸ்திரி பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர், காதுகேட்கும் கருவி என 119 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன்,  பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, எம்பிக்கள் கலாநிதி வீராசாமி, ஆர்.கிரிராஜன், துணை மேயர் மகேஷ்குமார், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன தலைவர் ரங்கநாதன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் பிரதீப் யாதவ், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,Kolathur , Chief Minister inaugurated Rs 3.49 crore project in Kolathur assembly constituency
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...