×

புரோக்கர்கள் மூலம் பணம் பெற்ற விவகாரம் தாம்பரம் ஆர்டிஓ அமலாக்க பிரிவுக்கு மாற்றம்

தாம்பரம்: புரோக்கர்கள் மூலம் பணம் பெற்ற விவகாரத்தில், தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அதிரடியாக அமலாக்க பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேற்கு தாம்பரம், தர்காஸ் பிரதான சாலையில் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 460க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகள், 300க்கும் மேற்பட்ட கல்லூரி பேருந்துகள், 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவன பேருந்துகள் இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இங்கு தினமும் 80க்கும் மேற்பட்ட புதிய இருசக்கர வாகனங்கள், 50க்கும் மேற்பட்ட புதிய நான்கு சக்கர வாகனங்கள் பதிவு செய்யவும், 50க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் எப்.சி செய்வதற்காகவும் வருகிறது.

ஒருநாளுக்கு 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெறவும், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாகன ஆர்.சி புத்தகங்கள் பெற்றுச்செல்லவும் வருகின்றனர். இவ்வாறு வந்து செல்லும் பொதுமக்களை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் முதலில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள புரோக்கர்கள் மூலம் வரும் நபர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதாகவும், அனைத்து பணிகளுக்கும் முக்கியமான பேப்பர் இருந்தால் மட்டுமே பணி நடைபெறுவதாகவும் தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. மேலும், எப்.சி செய்ய வரும் வாகனங்களை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாமலேயே சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு ஆவணங்கள் வழங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், முதல் நிலை ஆய்வாளர் சிவகுமார் மற்றும் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் அவரவர்களுக்கு என தனித்தனியாக புரோக்கர்களை வைத்து அவர்கள் மூலம் வந்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட பணிகளுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டு பணிகளை முடித்துக் கொடுத்ததோடு, அதற்கு தேவையானதை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட புரோக்கர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் நிலை இருந்தது. இவ்வாறு குறிப்பிட்ட புரோக்கர்கள் மூலம் மட்டுமே பணிகள் நடைபெறும் என்பதால் புரோக்கர்கள் நிர்ணயிக்கும் தொகையை மட்டுமே பொதுமக்கள் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனால் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு நேரடியாக எந்த ஒரு பணிகளும் நடைபெறாததால் அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி மாலை சென்னை ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறை டிஎஸ்பி தமிழ்மணி தலைமையில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதில் அலுவலகம் முழுவதும் உள்ள அறைகள், வட்டார போக்குவரத்து அலுவலரின் கார், வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே ஏஜென்ட்களாக செயல்பட்டு வந்தவர்களின் கடைகள் ஆகியவற்றில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். மேலும் அலுவலகத்தில் இருந்த வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலனிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் துருவி துருவி விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப்பின் முரணாகவே பதில் அளித்தார். மாலை தொடங்கி இரவு வரை நடந்த சோதனையின் போது அலுவலகத்தின் உள்ளே இருந்த புரோக்கர்கள் சக்தி, ராஜேஷ் ஆகியோரிடமிருந்து கணக்கில் வராத ரூ.70,840 கைப்பற்றப்பட்டது.

மேற்படி புரோக்கர்களிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தியதில் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலனுக்காகவும், முதல் நிலை ஆய்வாளர் சிவகுமார் மற்றும் இதர அலுவலருக்காக பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களுக்காக லஞ்சம் பெறப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, இதுதொடர்பாக விசாரணை நடந்து வந்த நிலையில் முதல் நிலை ஆய்வாளர் சிவகுமார் கடந்த ஆண்டு நவம்பர் 30ம் தேதி திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அமலாக்கப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இதில் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் மற்றும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் விருதுநகர் வட்டார போக்குவரத்து அமலாக்கப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் அலுவலக பணிகளில் பாதிப்பு ஏற்படும். எனவே விரைவில் புதிய வட்டார போக்குவரத்து அலுவலரை நியமனம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tambaram RTO , Transfer of matter received through brokers to Tambaram RTO enforcement wing
× RELATED கழிவுநீர் பாதை அடைப்பினால் நோய்...