×

திமுக பிரமுகர் கொலை வழக்கில் ஜாமீனில் வந்து தலைமறைவான ரவுடி ஓராண்டுக்குப்பின் கைது

அண்ணாநகர்: அண்ணாநகரில் திமுக பிரமுகரை வெட்டி கொலை செய்த வழக்கில், சிறைக்கு சென்று பின்னர் ஜாமீனில் வெளிவந்து, ஓராண்டாக தலைமறைவாக சுற்றி திரிந்த ரவுடி குன்றத்தூரில் கைது செய்யப்பட்டார். சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்தவர் திமுக பிரமுகர் சம்பத். இவரை கடந்த ஆண்டு அண்ணாநகரில் 7 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்த வழக்கில் குன்றத்தூர் பகுதியை சேர்ந்த ரவுடி லாரன்ஸ் (26) என்பவரை அண்ணாநகர் போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

சிறையில் இருந்து ஜாமீனில் வெளிய வந்த ரவுடி லாரன்ஸ் இந்த வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த ஒரு வருடமாக தலைமறைவானார். அவரை கைது செய்யும்படி அண்ணாநகர் போலீசாருக்கு நீதிமன்றம்  உத்தரவிட்டது. ரவுடி லாரன்ஸ் செல்போன் எண்களை வைத்து அண்ணாநகர் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், குன்றத்தூர் பகுதியில் ரவுடி பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து இன்ஸ்பெக்டர் கோபாலகுரு தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் குன்றத்தூர் பகுதிக்கு சென்று ரவுடி லாரன்சை சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும், ரவுடி லாரன்ஸ் மீது அண்ணாநகர், வில்லிவாக்கம், ஐசிஎப் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், அடிதடி போன்ற 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் ரவுடி அப்பு (எ) சிவசங்கர் (32). இவரை கடந்த 2 வருடத்துக்கு முன்பு கொலை முயற்சி வழக்கில் அமைந்தகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த ரவுடி, வழக்கு சம்பந்தமாக கடந்த 2 ஆண்டாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார்.

அவரை கைது செய்யும்படி நீதிமன்றம் அமைந்தகரை போலீசாருக்கு உத்தரவிட்டது. எனவே, போலீசார் ரவுடியை தேடி வந்தனர். இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு தினமும்  வந்து ரவுடி அப்பு மது அருந்துவதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, நேற்று அமைந்தகரை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நின்று கண்காணித்தனர். அங்கு மது குடிக்க வந்த ரவுடி அப்புவை கைது செய்தனர். பின்னர், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Rowdy ,DMK , Rowdy, who went on the run and went on bail in the case of murder of DMK leader, arrested after a year
× RELATED குண்டர் சட்டத்தில் ரவுடி கைது