×

திருச்சி, உளுந்தூர்பேட்டை, நெல்லையில் எடப்பாடியை கண்டித்து போஸ்டர்: ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் மீது போலீசில் புகார்

திருச்சி: எடப் பாடியை கண்டித்து திருச்சி, உளுந்தூர்பேட்டை, நெல்லையில் ஒட்டப் பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் செயல்படுகிறது. இரு அணிகளை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், ஒருவரையொருவர் சரமாரியாக குற்றம் சாட்டி வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் உள்பட சிலரை மீண்டும் அதிமுகவில் இணைக்க முடியாது என எடப்பாடி அணியினர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தொடர் தோல்விகளை சந்தித்து வந்த எடப்பாடி பழனிசாமி அணி, ஈரோடு இடைத்தேர்தலில் படுதோல்வி அடைந்தது. இதற்கு கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு தான் காரணம். எனவே கட்சி தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று திருச்சி மாவட்டம் முழுவதும் பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. திருச்சி, ரங்கம், திருவானைக்காவல் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ‘அதிமுக தலைவர்களே.. ஆட்சியை இழந்தோம்.. நாடாளுமன்றத்தை துறந்தோம், உள்ளாட்சியில் ஒதுக்கப்பட்டோம். ஈரோட்டில் இரட்டை இலையால் காப்புத்தொகை பெற்றோம்... திருந்துங்கள் இல்லையெனில்... கதியற்று போவோம்... இப்படிக்கு எம்ஜிஆர், அம்மாவின் உண்மை விசுவாசி... ஆர்.டி.சிவபாலன் ரங்கம் பகுதி செயலாளர் (கிழக்கு) என அச்சிடப்பட்டுள்ளது. இது, அதிமுகவில் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளராக உள்ள வேங்கையன் மற்றும்  இணை செயலாளர் பரமசிவம் ஆகியோர் பெயரில்  உளுந்தூர்பேட்டை நகரப்பகுதி முழுவதும் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து போஸ்டர் ஒட்டி உள்ளனர். அந்த போஸ்டரில், ‘வெளியேறு, வெளியேறு தலைமை பதவிக்கு தகுதியில்லாத எடப்பாடியே அதிமுகவை விட்டு வெளியேறு... உனக்கு  துதிப் பாடும் மூளை இல்லாத முட்டாள்களுடன் வெளியேறு... நயவஞ்சகம்.. நம்பிக்கை துரோகி’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த போஸ்டர்களை நேற்று காலை பார்த்த அதிமுக நகர செயலாளர் துரை தலைமையிலான நிர்வாகிகள் அதை கிழித்துவிட்டு உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் வேங்கையன் மற்றும் பரமசிவம் மீது புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து, தன்னை அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுக நகர செயலாளர் துரை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேங்கையன், உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். நெல்லை: நெல்லை மாவட்டம் திசையன்விளை, இட்டமொழி பகுதியில் ஓபிஎஸ் அணியின் நாங்குநேரி தொகுதி அமைப்பாளர் ஜி. டென்சிங் சுவாமிதாஸ் என்பவர் ‘8 தோல்வி எடப்பாடியாரே, எதிர்க்கட்சித் தலைவர் பதவி ராஜினாமா செய்’ என்ற தலைப்பில் போஸ்டர்களை ஒட்டியிருந்தார். இதை இபிஎஸ் அணியினர் கிழித்ததால் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இந்த போஸ்டர் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்கள் முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

Tags : Edappadi ,Trichy ,Ulundurpet ,Nellai ,OPS , Poster condemning Edappadi in Trichy, Ulundurpet, Nella: Complaint to police against OPS team administrators
× RELATED கச்சா எண்ணெய் விலை குறைந்தும்...