×

கொளத்தூரில் ரூ.71.81 கோடியில் கட்டப்பட உள்ள சிறப்பு மருத்துவமனை கட்டிடத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்: மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு

சென்னை: கொளத்தூர் பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளுடன் ரூ.71.81 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள சிறப்பு மருத்துவமனை கட்டிடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். கொளத்தூர் சட்டமன்ற தொகுதி பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான  சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளுடன் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 1,18,371  சதுர அடி பரப்பளவில் ரூ.71.81 மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சிறப்பு மருத்துவமனை கட்டிடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, எம்பிக்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன்,  துணை மேயர் மகேஷ் குமார், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் உமா,  மருத்துவக்  கல்வி இயக்குநர் சாந்திமலர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து  கொண்டனர். பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனை 37 ஆண்டுகளாக தரைத்தளம் மற்றும் நான்கு அடுக்கு கட்டிடமாக 100 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன்  2021 மே 18ம் தேதி மருத்துவமனையை புனரமைப்புச் செய்து தரம் உயர்த்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி, 300 படுக்கைகளாக தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனையை பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் 2021 ஆகஸ்டில் திறந்து வைத்தார். மேலும், மருத்துவமனையில் ரூ.1 கோடியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய அவசரகால ஊர்தி, 100 அதிநவீன வசதிகள் கொண்ட படுக்கைகள், ரூ.1 கோடியில் 10 படுக்கை வசதிகள்  ரத்த சுத்திகரிப்பு வார்டு, ரூ.5 கோடி மதிப்பிலான 4 நவீன அறுவை அரங்கங்களை கொண்ட அறுவைக்கூடம், ஆக்சிஜன் உற்பத்தி கலன், முதல்வரின்  விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்திற்கான சிறப்புப் பிரிவு, அதிநவீன ஆர்.டி.பி.சி.ஆர் சோதனைக் கூடம், 25 படுக்கைகள் கொண்ட உயர்தர உயிர் காக்கும் உபகரணங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவு, 12 படுக்கை வசதியுடன் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, திரவ பிராணவாயு கலன், சி.டி.ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் டாப்லர் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை, பொது மருத்துவம், குழந்தைகள் நலம், மகளிர் மற்றும் மகப்பேறு , கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், சித்த மருத்துவப் பிரிவு, எலும்பியல் பிரிவு போன்ற பிரிவுகள் உள்ளன. மேலும், தினசரி 2,000 முதல் 2,500 புறநோயாளிகளும், 150 உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேம்படுத்தப்பட்ட உயர்தர அறுவை சிகிச்சை அரங்கில் மாதந்தோறும் 100 அறுவை சிகிச்சைகளும், 1500 சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகளும் நடக்கிறது. ரத்த சுத்திகரிப்பு பிரிவின் கீழ் மாதந்தோறும் 450 முதல் 500 பேர் பயனடைந்து வருகின்றனர்.

* சிறப்பு மருத்துவமனையின் சிறப்பு அம்சங்கள்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் 2022-23ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், சென்னை பெரியார் நகர் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை, விபத்து காய சிகிச்சைப் பிரிவு, தொற்றுநோய் பிரிவு, டயாலிசிஸ், ரத்த வங்கி போன்ற சேவைகள் வழங்க உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூ.71.81 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிடம் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், முதல்வர் சட்டப்பேவையில் விதி எண் 110-ன் கீழ் கடந்த 2022 கடந்த 2022 மே 7ம் தேதி ‘‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’’ திட்டத்தின் கீழ், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது தொகுதி மக்களுடைய தேவைகளை அறிந்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் 10 முக்கிய திட்டங்கள் குறித்த பட்டியலை அளிக்க வேண்டும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பின்படி, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள பெரியார் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவமனை அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்படி, பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவு கொண்ட சிறப்பு மருத்துவமனைக்கு முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த புதிய மருத்துவமனையில், மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேக வசதிகளுடன் கூடிய ஆண்கள் மற்றும் பெண்களுக்கான புறநோயாளிகள் பிரிவு, கூழாங்கல் பதித்த நடைபயிலும் கூடம் மற்றும் இயன்முறை சிகிச்சைக் கூடம், மாற்றுத்திறனாளிகளுக்கான உள்நோயாளிகள் பிரிவு வார்டுகள், செயற்கை கை, கால் தயாரிக்கும் கூடம் ஆகியவையும், 20 படுக்கைகளுடன் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முனைப்பு உயர்த்துதல், மகப்பேறு பிரிவு, ரத்த வங்கி, மூன்று அறுவை சிகிச்சை அரங்குகள், பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு, முழு உடல் பரிசோதனை மையம், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டப் பிரிவு, நம்மை காக்கும் 48 திட்டப் பிரிவு, அனைத்துவித தீவிர சிகிச்சை பிரிவுகள் போன்ற மருத்துவப் பிரிவுகள் அமைக்கப்பட உள்ளது. புதிதாக அமைய உள்ள மருத்துவமனை கட்டிடத்தில் மின் தூக்கி வசதிகள், ஜெனரேட்டர் வசதிகள், சிறப்பு மருத்துவ இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், தீத்தடுப்பு கட்டமைப்புகள், கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சிக் கட்டமைப்புகள் போன்ற வசதிகளும் அமைக்கப்பட உள்ளன.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Kolathur , Chief Minister M. K. Stalin laid the foundation stone for the special hospital building to be built at a cost of Rs 71.81 crore in Kolathur: Special treatment unit for the differently abled.
× RELATED திமுகவிற்கும் வடசென்னைக்குமான உறவு...