×

குடிநீர், கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணம் செலுத்த ஏப். 1 முதல் நுகர்வோர் அட்டை வழங்கப்படாது: சென்னை குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்த ஏப்ரல் 1ம் தேதி முதல் நுகர்வோர் அட்டை வழங்கப்பட மாட்டாது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கை: சென்னை குடிநீர் வாரியத்தின் நுகர்வோர்கள் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்துவதை டிஜிட்டல் கட்டண முறையில் ஊக்குவிக்கவும், வரிசையில் காத்திருக்கும் நேரத்தை தவிர்க்க மற்றும் காகிதப் பயன்பாட்டைக் குறைக்கவும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நுகர்வோர் அட்டை வழங்கப்பட மாட்டாது. மேலும், ஏற்கனவே உள்ள நுகர்வோர் அட்டையில் எந்த பதிவும் செய்யப்பட மாட்டாது.

நுகர்வோர்களுக்கு 5 வருடங்களுக்கு ஒருமுறை நுகர்வோர் அட்டை சென்னை குடிநீர் வாரியத்தால் வழங்கப்படுகிறது. தற்போது, 2020ம் ஆண்டின் 2020-21 முதல் 2024-25 வரையிலான கால கட்டத்திற்கு அனைத்து நுகர்வோர்களுக்கும் நுகர்வோர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரியம், குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை வசூலிக்கும் முறையை நவீன இணைய அமைப்பிற்கேற்ப மேம்படுத்தியுள்ளது. இந்த இணைய வழியிலான கட்டண நுழைவாயிலை பயன்படுத்தி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாக செலுத்தலாம்.  

மேலும், யுபிஐ, க்யூஆர் குறியீடு மற்றும் பிஓஎஸ் போன்ற பிற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணைய வசதி மூலம் நுகர்வோர்கள் செலுத்த வேண்டிய நிலுவை தொகையை தெரிந்துகொள்ளவும், பணம் செலுத்தும் ரசீதை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் இயலும். வசூல் மையத்தில் பணம் செலுத்தும்போது அளிக்கப்படும் கணினி ரசீது பணம் செலுத்தியதற்கான பதிவாக கருதப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai Water Board , Apr. to pay drinking water, sewerage tax, drinking water fee. Consumer card will not be issued from 1: Chennai Water Board Information
× RELATED குடிநீர், கழிவுநீர் வரி செலுத்த வரும்...