தமிழ்நாட்டில் வாழும் பிற மாநில தொழிலாளர்கள் குறித்த ஆய்வு கூட்டம் வெளிமாநில மக்கள் வசிக்கும் பகுதிகளில் போலீஸ் ரோந்து: அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை

சென்னை: வெளிமாநில மக்கள் வசிக்கும் பகுதிகளில் போலீசார் இரவு, பகல் ரோந்துப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை அதிகாரிகளின் கூட்டத்தில் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார். தமிழ்நாட்டில் வாழும் பிற மாநில தொழிலாளர்கள் குறித்த ஆய்வு கூட்டம் காணொலி வாயிலாக, டிஜிபி அலுவலகத்தில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் உளவுப் பிரிவு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம்,  சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி சங்கர், மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜிக்கள் உள்ளிட்ட  அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  பின்னர் அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு அறிவுரை வழங்கினார். அப்போது ‘‘பிற மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் குறித்தும், தொழிலாளர்களின் பெயர், வயது, பாலினம் மற்றும் அவர்களின் சொந்த ஊர் குறித்தும் தகவல்களை காவல்துறை சேகரிக்க வேண்டும். பிற மாநில தொழிலாளர்களுடன் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.

பிற மாநில தொழிலாளர்களுடன் காவல் ஆய்வாளர் தொடர்பில் இருக்கும் வகையில், அவர்களில் ஒருவரை ஒருமுனை தொடர்பாளராக நியமிக்க வேண்டும். வெளிமாநில தொழிலாளர்களுக்கான உதவி மைய தொலைபேசி எண்ணை அவர்களுக்குதெரிவிக்க வேண்டும்.மேலும், காவல் ஆய்வாளர்கள் ஒரு முனை தொடர்பாளராக நியமிக்கப்பட்ட தொழிலாளர்களை உள்ளடக்கிய வாட்ஸ் அப் குழுவை உருவாக்க வேண்டும். பிற மாநில தொழிலாளர் வசிக்கும் இடங்களில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் இரவு, பகல் ரோந்து மேற்கொள்ள வேண்டும். பிற மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை செய்யும் மற்றும் தங்கி இருக்கும் இடங்களில் பட்டா புத்தகங்கள் வைத்து அவ்வப் போது தணிக்கை செய்ய வேண்டும். வெளி மாநில தொழிலாளர்களிடமிருந்து புகார்கள் ஏதேனும் காவல் நிலையத்தில் பெறப்பட்டால் அது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிறமாநிலத் தொழிலாளர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டிருந்தால் அதன் காரணங்கள் குறித்து விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  சமூக ஊடகங்களில் இந்தியில் பரப்பப்படும் போலி வீடியோக்கள் மற்றும் தகவல்களைத் தொடர்ந்து கண்காணித்து சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் தெளிவுபடுத்தி உடனடியாக செய்தி வெளியிட வேண்டும்.

Related Stories: