×

4 மாதம் கிடப்பில் வைத்திருந்த ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை, தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பினார் ஆர்.என்.ரவி..!

சென்னை: ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்யும் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து பலர் தற்கொலை செய்துள்ளனர். இந்த தொடர் தற்கொலைகள் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிப்பது மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் குழு நியமிக்கப்பட்டது.

அந்த குழு அளித்த அறிக்கையின்படி, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய அவசர சட்டம் இயற்றப்பட்டு கடந்த செப்டம்பர் 26ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதற்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததால் அவசர சட்டம் அக்டோபர் 3ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 17ம் தேதி மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் அவசர சட்டத்தை நிரந்தரமாக்கும் சட்ட மசோதா அக்டோபர் 19ம் தேதி நிறைவேற்றப்பட்டு தமிழக கவர்னரின் ஒப்புதலுக்காக அக்டோபர் 28ம் தேதி அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் சட்ட மசோதா குறித்து, கடந்த 24ம் தேதி கவர்னர் மாளிகையில் இருந்து தமிழக அரசுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்கான சட்ட மசோதா குறித்து கவர்னருக்கு ஏற்பட்டிருக்கிற சில சந்தேகங்கள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. கவர்னர் கேட்ட விளக்கங்களுக்கு சட்டத்துறை சார்பில் 24 மணி நேரத்தில் விளக்கம் தயாரித்து, கடந்த 25ம் தேதி கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். ஆனாலும், கவர்னர் சட்ட மசோதாவுக்கு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை 4 மாதங்களாக கிடப்பில் வைத்திருந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். மீண்டும் சில திருத்தங்களை செய்து அனுப்பும்படி ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : RN ,Ravi ,Tamil Nadu government , RN Ravi sent back the online gambling ban bill that was kept in abeyance for 4 months to the Tamil Nadu government..!
× RELATED பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து