×

ஆர்.எஸ். மங்கலம் அருகே ரூ.5.25 லட்சத்தில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தை திறக்க கோரிக்கை

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ் மங்கலம் அருகே சனவேலி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள சமூக சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்டது சனவேலி கிராமம். இந்த கிராமத்தை சுற்றி கவ்வூர், காவனக்கோட்டை, கண்ணுகுடி, ஏ.ஆர். மங்கலம், கொண்ணக்குடி, பகவதி மங்கலம், குலமாணிக்கம், ஓடைக்கால் உள்ளிட்ட பல கிராம பகுதி மக்கள் அன்றாட தேவைகளுக்கு பொருட்கள் வாங்கவும், ஆர்.எஸ் மங்கலம், ராமநாதபுரம், திருவாடானை, தேவகோட்டை, காரைக்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல சனவேலிக்கு வர வேண்டும்.

வாரம்தோறும் வியாழக்கிழமையன்று வாரச்சந்தையும் நடைபெறுவதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் வந்து செல்கின்றனர். இக்கிராமத்தில் கடந்த 2020-2021 நிதியாண்டில் ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சமூக சுகாதார வளாகம் முக்கிய பகுதியான திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகில் கட்டப்பட்டது. ஆனல் இதுவரை திறக்கப்படாமல் பூட்டி உள்ளதால் வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

எனவே இந்த சமூக சுகாதார வளாகத்தை திறக்க சம்மந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : RS ,Mangalam , RS Request to open a health complex built at a cost of Rs.5.25 lakhs near Mangalam
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனைக்காக...