வி.கே.புரம்: வனப்பேச்சியம்மன் கோயிலுக்கு மாலை 5 மணிக்கு மேல் செல்ல வனத்துறையினர் தடை விதித்ததால் பாபநாசம் செக்போஸ்ட்டில் பக்தர்கள் நள்ளிரவு 1 மணி வரை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வனத்துறை அதிகாரிகளுடன் இசக்கிசுப்பையா எம்எல்ஏ மற்றும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது. ெநல்லை மாவட்டம், பாபநாசம், மேற்குத் தொடர்ச்சி மலை காரையாறு வனப்பேச்சியம்மன் கோயிலில் நேற்று கொடை விழா நடந்தது. பாபநாசம் முண்டந்துறை புலிகள் காப்பக பாதுகாப்பு பகுதிக்குட்பட்ட இடமாக காரையாறு பகுதி உள்ளதால், மாலை 5 மணிக்கு மேல் அங்கு செல்ல ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த வனத்துறையினரின் தடை அமலில் உள்ளது.
இந்நிலையில் நேற்று 5 மணிக்கு மேல் எந்த வாகனத்தையும் வனத்துறையினர் காரையாறுக்கு அனுமதிக்கவில்லை. கொடை விழாவுக்கு செல்ல விரும்பிய பக்தர்கள் இரவு 7.30 மணிக்கு சென்ற அரசு பஸ்சில் ஏறினர். ஆனால் பஸ்சில் ஏறிய பக்தர்களை பாபநாசம் சோதனைச் சாவடியில் இருந்த வனத்துறையினர் கீழே இறக்கி விட்டனர். இதைக் கண்டித்து பக்தர்கள் சோதனைச் சாவடி முன்பாக மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த அங்கு விரைந்து வந்த அம்பை எம்எல்ஏ இசக்கிசுப்பையா, ஏஎஸ்பி பல்பீர்சிங், வி.கே.புரம் இன்ஸ்பெக்டர் பெருமாள், பாபநாசம் வனவர் ஜெகன் ஆகியோர் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது வனத்துறை சார்பில், ‘‘ வனப் பேச்சியம்மன் கோயிலுக்கு செல்ல மாலை 5 மணிக்கு மேல் வந்த பக்தர்களை தான் நாங்கள் நிறுத்தி வைத்தோம். மாலை 4.55 மணி வரை வாகனங்களில் பக்தர்கள் சென்று கொண்டு தான் இருந்தார்கள். வனத்துறையின் விதிமுறைகளின் படி மாலை 5 மணிக்கு மேல் பக்தர்களை அனுமதிக்கவில்லை.’’ என்றனர். இதையடுத்து செக்போஸ்டில் உள்ள சிசிடிவி காமிரா பதிவுகளை காட்டும்படி இசக்கி சுப்பையா எம்எல்ஏ கேட்கவே, அதை வனத்துறை அதிகாரிகள் அவரிடம் காட்டினர். அதில் நேற்று மாலை 4.52 மணி வரை பக்தர்கள் வனப்பேச்சியம்மன் கோயிலுக்கு சென்றது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து இன்று மட்டும் இங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பக்தர்களை இரவில் செல்ல அனுமதிக்கும்படி எம்எல்ஏ கோரிக்கை விடுத்தார். மேலும் கைக்குழந்தைகளுடன் வந்த 7 பேரை மட்டுமாவது கோயிலுக்கு விடுமாறு வலியுறுத்தினார். அப்போது சிலர் தங்கள் குழந்தைகள் கோயிலில் உள்ளதாகவும், அவர்களுக்கு பால் வாங்க வெளியே வந்ததாகவும், பாலை கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினர். இதையடுத்து அவர்களை மட்டும் வனத்துறை வாகனத்தில் அழைத்துச் செல்ல அனுமதிப்பதாகவும், மற்றவர்கள் காலையில் தான் கோயிலுக்கு செல்ல முடியும் என்று வனத்துறையினர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.
இதை இசக்கிசுப்பையா எம்எல்ஏவும், போலீசாரும் பக்தர்களிடம் எடுத்துக் கூறி அவர்களை சம்மதிக்க வைத்தனர். இதையடுத்து இரவு 7.30 மணிக்கு தொடங்கிய மறியல் போராட்டம் நள்ளிரவு 1 மணிக்கு முடிவடைந்தது. வனத்துறை வாகனத்தில் 7 பேர் மற்றும் குழந்தைளுக்கு பால் வாங்கிக் கொண்டு சென்றவர்கள் என சிலர் மட்டும் அழைத்துச் செல்லப்பட்டனர். மற்றவர்கள் கலைந்து சென்றனர்.
ரோட்டில் பொங்கலிட்ட திருநங்கைகள்
இந்த மறியலில் ஈடுபட்ட 4 திருநங்கைகளும் தங்களையும் வனத்துறை வாகனத்தில் கோயிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கு வனத்துறையினர் மறுத்து விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ரோட்டிலேயே கற்களையும், பானைகளையும் வைத்து பொங்கலிட்டனர். இதை அப்புறப்படுத்த வந்த வனத்துறையினரிடம், இசக்கி சுப்பையா எம்எல்ஏ பேசி, காலையில் தானே கோயிலுக்கு போகப் போகிறார்கள், எனவே பொங்கலிடட்டும் என்று கூறி வனத்துறையினரை சமாதானப்படுத்தினார். திருநங்கைகள் ரோட்டில் பொங்கலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.