×

உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக வாழ தகுதியற்றதாக மாறிய மரிங்கா நகரம்: ரஷ்யா வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி..!

கீவ்: உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக வாழ தகுதியற்றதாக மரிங்கா நகரம் மாறியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 30 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள நேட்டோ கூட்டமைப்பில் தன்னை இணைத்து கொள்ள உக்ரைன் முயன்றது. அப்படி உக்ரைன் இணைந்துவிட்டால் சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தங்களது தலைநகரான மாஸ்கோ நேட்டோ நாடுகளின் இலக்குகளுக்கு இறையாகும் என ரஷ்யா அஞ்சியது. உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் தனது பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்பதாலேயே தாக்குதலை கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி தொடங்கியது ரஷ்யா.

மறுபுறத்தில் அமெரிக்காவின் உலகளாவிய ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரவும் நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம் என்ற புதிய செய்தியை அமெரிக்காவிற்கு சொல்லவே வெகு தைரியமாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த உக்ரைன் - ரஷ்யா போரினால் சுமார் 42 ஆயிரம் பொதுமக்கள் பலியாகி உள்ளனர். 2 லட்சம் ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ள நிலையில், 57 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளதாகவும் 15 ஆயிரம் பேர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் தொடங்கியதில் இருந்து இதுவரை டேனேட்ஸ்க், கேர்சன், லுஹான்ஸ்க் உள்ளிட்ட 20% பரப்பளவை ரஷ்யாவிடம் இழந்தது உக்ரைன்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. ரஷ்யா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ரஷ்யாவை எதிர்த்து போரிட அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இத்தாலி, துருக்கி போன்ற 30க்கும் மேற்பட்ட நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.

அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது. மேலும், சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீரென உக்ரைனுக்கு சுற்றுப்பயணம் செய்தது ரஷ்யாவின் கோவத்தை பலமடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா அறிவித்த நிலையில், தற்போது தனது தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் உக்ரைனைச் சேர்ந்த டொனெட்ஸ்க் பகுதியிலுள்ள மரிங்கா என்ற நகரம் முற்றிலும் அழிந்துள்ள விடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிரோன் மூலம் எடுக்கப்பட்ட விடியோ காட்சியை உக்ரைன் வெளியிட்டுள்ள நிலையில், அது கட்டிடங்கள் அனைத்தும் முற்றிலும் உதிர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், 10,000 பேர் தங்கியிருந்த இந்த நகரம் தற்போது மனிதர் வாசிக்க தகுதியில்லாததாக மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த நகரத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் ராணுவ நிர்வாகம், காவல்துறை அதிகாரிகளால் முழுவதுமாக வெளியேற்றப்பட்டனர் என்றும், இன்றைய சூழலில் அங்கு வாழ்வது சாத்தியமற்றது என்றும் உக்ரைனிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் உக்ரைன் - ரஷ்யா போர் மேலும் தீவிரமடையும் என அஞ்சப்படுகிறது.

Tags : Maringa ,Ukraine ,Russia , The city of Maringa, which has become unlivable due to the Ukraine-Russia war: Shocked by the video released by Russia..!
× RELATED உக்ரைன் டிரோன் தாக்குதலில் ரஷ்யாவின் நவீன போர் விமானம் சேதம்