×

100 அடி உயரத்தில் மரணத்தை கண் முன் பார்த்தேன்: பாராகிளைடிங் விபத்திலிருந்து தப்பிய இளம்பெண் பேட்டி

திருவனந்தபுரம்: 100 அடி உயரத்திலிருந்து மரணத்தை கண் முன் பார்த்தேன் என்று திருவனந்தபுரம் அருகே வர்க்கலாவில் பாராகிளைடிங்கில் சென்றபோது ஹைமாஸ்ட் மின்கம்பத்தில் சிக்கி உயிர் பிழைத்த கோவையை சேர்ந்த இளம்பெண் கூறினார். திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலா சர்வதேச சுற்றுலா மையமாகும். இங்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்களில் சிலர், பாராகிளைடிங்கில் சாகச பயணம் நடத்துவது உண்டு. ஒரு தனியார் நிறுவனம் இதை நடத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று கோவையை சேர்ந்த இளம்பெண் பவித்ரா, பாராகிளைடிங்கில் சாகச பயணம் மேற்கொண்டார். அவருடன் உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த பயிற்சியாளரான சந்தீப்பும் சென்றார். உயரத்தில் பறந்த போது திடீரென கோளாறு ஏற்பட்டு 100 அடி உயர ஹைமாஸ்ட் மின்கம்பத்தில் கிளைடிங் சிக்கியது. இருவரும் தவித்தனர். தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள், போலீசார், அந்த பகுதியினரின் உதவியுடன் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 2 பேரையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் வர்க்கலாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவம் குறித்து பவித்ரா கூறுகையில், ‘வர்க்கலாவுக்கு சில முறை சுற்றுலா வந்துள்ளபோதிலும் பாராகிளைடிங்கில் இப்போதுதான் முதன் முதலாக பயணம் செய்தேன். பறக்க தொடங்கி 10 நிமிடங்களில் காற்றின் திசை மாறி வேகம் அதிகரித்தது. அப்போது கிளைடிங்கின் ஒரு பகுதி தாழ்ந்து கீழ்நோக்கி பறக்க தொடங்கியது. எதிர்பாராதவிதமாக அங்குள்ள ஹைமாஸ்ட் மின்கம்பத்தில் கிளைடிங் சிக்கியது. நாங்கள் தூணை கெட்டியாக பிடித்து கொண்டோம். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் மரணத்தை கண் முன் பார்த்து கொண்டிருந்தேன்.

கடைசியில் தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் எங்களுக்கு தந்த அறிவுரைகளை சரியாக பின்பற்றியதால் உயிர் பிழைத்தோம். எங்களது உயிரை காப்பாற்றிய போலீசார், தீயணைப்பு வீரர்கள், அந்த பகுதியினருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.

3 பேர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக பாராகிளைடிங் நிறுவனத்தின் மீது வர்க்கலா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் பயிற்சியாளர் சந்தீப் மற்றும் பாராகிளைடிங் நிறுவன ஊழியர்களான ஸ்ரேயஸ், பிரபுதேவ் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். விசாரணையில், கிளைடிங் பறக்க தொடங்கிய சிறிது நேரத்திலேயே பழுதானது என்றும், அதை பயிற்சியாளர் சந்தீப் அலட்சியப்படுத்தியதுதான் விபத்திற்கு காரணம் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் பாராகிளைடிங் நிறுவனத்திற்கு வர்க்கலா கடற்கரை பகுதியில் பறப்பதற்கு முறையான அனுமதி இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

Tags : Faced Death at 100 Feet: Interview with Paragliding Survivor
× RELATED அமலாக்கப்பிரிவு தன் அரசியல்...