×

வேளாங்கண்ணியில் இருந்து ஆஸி.க்கு தப்பி செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 6 பேர் கைது

* ரூ17 லட்சம் ரொக்கம் பறிமுதல்
* விசைப்படகு உரிமையாளருக்கு வலை

நாகை: வேளாங்கண்ணியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு தப்பி செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.17 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு இலங்கை அகதிகள் தப்பி செல்ல இருப்பதாக க்யூ பிரிவு போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதன்பேரில் வேளாங்கண்ணியில் உள்ள விடுதிகளில் டிஎஸ்பி சிவசங்கரன் தலைமையில் போலீசார் மற்றும் க்யூ பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது வேளாங்கண்ணி மாதா கோயில் நிர்வாகத்துக்கு சொந்தமான விடுதி அறையில் இலங்கை அகதிகள் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் குளத்துவாய்ப்பட்டி முகாமை சேர்ந்த கேனுஜன் (34), கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவர்பள்ளி முகாமை சேர்ந்த ஜெனிபர்ராஜ் (23), தினேஷ் (18), புவனேஸ்வரி (40), செய்யாறு கீழ்ப்புதுப்பாக்கம் வேல்முருகன் தெருவை சேர்ந்த துஷ்யந்தன் (36) ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் வேளாங்கண்ணியில் மற்றொரு விடுதியில் தங்கியிருந்த வேலூர் வாலாஜாபேட்டை குடிமல்லூர் அகதிகள் முகாமை சேர்ந்த சதீஸ்வரன் (32) என்பவரையும் கைது செய்தனர்.

இந்த 6 பேரையும் வேளாங்கண்ணி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து தொடர்ந்து நடத்திய விசாரணையில், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான பதிவு செய்யப்படாத விசைப்படகில் ஆஸ்திரேலியா தப்பி செல்ல திட்டமிட்டதும், இதற்காக தங்களது முகாமில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் புறப்பட்டு வந்து வேளாங்கண்ணியில் அறை எடுத்து தங்கியிருந்ததும், படகில் செல்வதற்கு ரூ.17 லட்சத்தை செல்வத்துக்கு கொடுப்பதாக பேசி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து படகில் தப்பி செல்ல கொடுக்க வைத்திருந்த ரூ.17 லட்சத்தையும் பறிமுதல் செய்த க்யூ பிரிவு போலீசார், இவர்களுக்கு பணம் எப்படி கிடைத்தது, இவர்களை ஒருங்கிணைத்தது யார் என்று விசாரிப்பதுடன் விசைப்படகு உரிமையாளரான செல்வத்தையும் தேடி வருகின்றனர்.

Tags : Velankanni ,Australia , 6 Sri Lankan refugees who tried to escape from Velankanni to Australia were arrested
× RELATED ஈஸ்டர் சண்டே விழாவில் பங்கேற்க...