தேனி : தேனி மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறை மூலம் மாநில சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள், மாவட்ட இதர சாலைகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஊராட்சிகளின் சார்பில் பராமரிக்கப்படும் ஊரக சாலைகள் உள்ளன. இதுதவிர ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய சாலைகள் உள்ளன. இதில் தேனி மாவட்டத்தில் மதுரையில் இருந்து ஆண்டிபட்டி, தேனி நருக்குள் வந்து போடி விலக்கில் இருந்து போடி, மூணாறு செல்லும் சாலை ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட எல்லையான காட்ரோட்டில் இருந்து துவங்கும் சாலையானது தேவதானப்பட்டி புறவழிச்சாலையாகவும், அங்கிருந்து எண்டபுளி புதுப்பட்டி புறவழிச்சாலையாகவும், இப்புறவழிச்சாலை மதுராபுரி அருகே பிரிந்து அங்கிருந்து தேனி நகர், சின்னமனூர், கம்பம், கூடலூர் நகரங்களுக்குள் செல்லாமல் நகருக்கு வெளியே புறவழிச்சாலை வழியாக செல்லும் வகையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் செயல்படும் துறை மூலாக தேசிய நெடுஞ்சாலை உள்ளது.
மாநில நெடுஞ்சாலைத் துறை மூலமாக தேவதானப்பட்டி முதல் பெரியகுளம் வழியாக மதுராபுரி வழியாக தேனிநகருக்குள் வந்து அங்கிருந்து வீரபாண்டி, வரையிலும், சின்னமனூர் புறவழிச்சாலை பிரிவில் இருந்து சின்னமனூர் நகர் தாண்டி புறவழிச் சாலை வரையும் என தேசிய நெடுஞ்சாலை அல்லாத முக்கிய சாலைகள் அனைத்தும் மாநில நெடுஞ்சாலைத் துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக திண்டுக்கல் முதல் லோயர்கேம்ப் வரை சாலை அமைக்கப்பட்ட பிறகு, மாநில நெடுஞ்சாலை இணையும் எண்டபுளி புதுப்பட்டியில் உள்ள பெரியகுளம் பிரிவு, போடேந்திரபுரம் பிரிவு, வீரபாண்டி பிரிவு, சின்னமனூர் பிரிவு, உத்தமபாளையம் பிரிவு, கம்பம் பிரிவு ஆகிய பகுதிகள் விபத்துக்கள் நிறைந்த பகுதிகளான மாறிப்போய்விட்டன.
மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலை ஆணைய சாலையும் சேரும் பகுதியில் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் விஞ்ஞானபூர்வ வகையில் சாலைப்பகுப்புகள் அமைக்கப்படவில்லை. நான்கு திசைகளில் இருந்து வரும் வாகனங்கள் ஒன்றையொன்று மோதிக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இச்சாலை சந்திப்புகளில் பெருமளவில் விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது.
தேனி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 2018ம் ஆண்டில் சாலை விபத்துக்களினால் 253 பேர் இறந்துள்ளனர். 802 பேர் ஊனமடைந்துள்ளனர். 2019ம் ஆண்டில் சாலை விபத்துக்களினால் 249 பேர் இறந்துள்ளனர். 721 பேர் ஊனமடைந்துள்ளனர். கொரோனா காலகட்டமான 2020ம் ஆண்டில் சாலை விபத்துக்களினால் 202 பேர் இறந்துள்ளனர். 607 பேர் ஊனமடைந்துள்ளனர். 2021ம் ஆண்டில் சாலை விபத்துக்களினால் 226 பேர் இறந்துள்ளனர்.
734 பேர் ஊனமடைந்துள்ளனர். 2022ம் ஆண்டில் நவம்பர் மாதம் வரை சாலை விபத்துக்களினால் 275 பேர் இறந்துள்ளனர். 745 பேர் ஊனமடைந்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் சாலை விபத்துக்களினால் 1205 பேர் இறந்துள்ளனர். 3609 பேர் ஊனமடைந்துள்ளனர். இத்தகைய விபத்துக்களில் பெரும்பாலான விபத்துக்கள் இந்த தேசிய நெடுஞ்சாலை ஆணைய சாலை சந்திப்புகளில் நிகழ்ந்திருப்பது இச்சாலையில் பயணிக்கும் பயணிகள் மத்தில் பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
தேனியில் இருந்து திண்டுக்கல் செல்லக்கூடிய தேனி பெரியகுளம் சாலையானது சமீபத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறை மூலம் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. இதில் அன்னஞ்சி பிரிவில் இருந்து மதுராபுரி அருகே தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சாலையில் இணையும் பகுதி வரை நான்குவழிச்சாலை அமைக்க வேண்டிய நிலையில் சாலை இணையக்கூடிய சாலை பிரிவு பகுதியில் பெரும் குழப்பத்தை மாநில நெடுஞ்சாலைத் துறை ஏற்படுத்தி உள்ளது. இதில் இச்சாலை இணைய உள்ள பகுதிவரை நான்கு வழிச்சாலையாக வரும் சாலையானது திடீரென சாலை பிரிவு பகுதியில் தேனியில் இருந்து வரும் வாகனங்கள் திண்டுக்கல் செல்லும் சாலையில் செல்ல திடீரென குறுகியதாக 7 மீட்டர் சாலையாக மாற்றப்பட்டுள்ளது.
அதேசமயம் குமுளியில் இருந்து திண்டுக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய சாலையில் வரும் வாகனங்கள் தேனி நகருக்குள் நுழைய தேவையற்ற குழப்பமான சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இச்சாலையில் தினமும் சிறு விபத்துக்கள் நிகழ்ந்து வருகிறது. இதேபோல மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலை ஆணைய சாலையும் சேரும் இடங்களில் ஹைமாஸ் விளக்குகள் சில இடங்களில் அமைத்த போதிலும், அவை சரிவர எரியாத நிலையே நீடிக்கிறது.எனவே மாவட்ட கலெக்டர் இச்சாலைகளையும், மாநில நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய சாலைகள் இணையும் பகுதிகளை பார்வையிட்டு விபத்துக்களை தவிர்க்க தேவையான மாற்றங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
