×

காதலியிடம் ரூ68 லட்சம் மோசடி: போரூர் ஏரியில் குதித்த வாலிபர் சடலம் மீட்பு

பூந்தமல்லி: காதலியிடம் ரூ.68 லட்சம் மோசடி செய்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கடந்த 3 நாட்களுக்கு முன் போரூர் ஏரியில்  குதித்தார். இன்று காலை அவரது சடலத்தை அழுகிய நிலையில் போலீசார் மீட்டனர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவர் நிஷாந்த் (29). இவர் பள்ளியில் படிக்கும்போது, வடபழனியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. பின்னர் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையே அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, அவரிடம் இருந்து ரூ68 லட்சம் வரை நிஷாந்த் பெற்று ஏமாற்றி வந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன் வடசென்னையை சேர்ந்த தொழிலதிபரின் மகளுக்கும் நிஷாந்த்துக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றது. இதுகுறித்து தகவலறிந்த காதலி, நிஷாந்த்திடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் அல்லது தன்னிடம் வாங்கிய ரூ68 லட்சத்தை திரும்ப தரும்படியும் வலியுறுத்தியுள்ளார். இதனால் அப்பெண்ணுக்கு நிஷாந்த் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மதுரவாயல் போலீசில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். இதுபற்றி தகவலறிந்ததும், தனது பெண்ணுடன் நிஷாந்த்துக்கு நடைபெறவிருந்த திருமண ஏற்பாடுகளை வடசென்னை தொழிலதிபர் நிறுத்திவிட்டார்.

இதைத் தொடர்ந்து, நிஷாந்த்மீது போக்சோ உள்பட பல்வேறு பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன் தனது நண்பர்களுக்கு செல்போன் வாட்ஸ்-அப் மூலமாக போரூர் ஏரிக்குள் விழுந்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக நிஷாந்த் குறுந்தகவல் அனுப்பியுள்ளார். பின்னர் அன்று காலை போரூர் ஏரி அருகே காரை நிறுத்திவிட்டு, அங்கிருந்து நிஷாந்த் தற்கொலை செய்யும் எண்ணத்தில் போரூர் ஏரியில் குதித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்ததும் போரூர் போலீசாரும் தீயணைப்பு மற்றும் நீச்சல் வீரர்கள் நவீன உபகரணங்களுடன் வந்து, கடந்த 2 நாட்களாக நிஷாந்த்தை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், போரூர் ஏரியில் இன்று காலை அழுகிய நிலையில் ஒரு வாலிபரின் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு சென்ற போரூர் போலீசார், அழுகிய நிலையில் இருந்த வாலிபரின் சடலத்தை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில், போரூர் ஏரியில் இன்று காலை அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர், காதலியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ₹68 லட்சம் மோசடி செய்த நிஷாந்த் எனத் தெரியவந்தது. மேலும், அவரது அடையாளங்களை போலீசாரிடம் உறவினர்கள் உறுதி செய்தனர். இதுகுறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.


Tags : Borur lake , Fraud of Rs 68 lakh on girlfriend: Body of boy who jumped into Borur lake recovered
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்