தமிழர்களின் வாழ்த்துக்களுடன் ஹோலி பண்டிகை கோலாகலம்-முழு பாதுகாப்புடன், அச்சமின்றி கொண்டாடிய வட மாநிலத்தவர்கள்

வடமாநிலத்தவர்கள் பற்றி பரவிய வதந்தி வீடியோவா ல் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பணிபுரியும் வட மாநிலத்தவர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக அவர்கள் இங்கிருந்து வெளியேறி தங்கள் மாநிலங்களுக்கு செல்வதாகவும் கருத்து பரவியது. ஆனால் பெரும்பாலானோர் ஹோலி பண்டிகை கொண்டாடவே தங்கள் மாநிலங்களுக்கு சென்றனர். வடமாநிலத்தவர்கள் மத்தியில் நிலவிய பீதியை மாவட்ட நிர்வாகம் முயற்சி எடுத்து முறியடித்தது. அதன் அடிப்படையில் தங்கள் மாநிலங்களுக்கு செல்லாத வட மாநிலத்தவர்கள் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

தொழில்   நகரமான திருப்பூரில் பீகார், ஒடிசா, மேற்கு வங்கம், ராஜஸ்தான்,   உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான தொழிலாளர்கள்   பணிபுரிகின்றனர். பலர் சொந்த ஊருக்கு சென்றிருந்தாலும் திருப்பூரில் இருந்த வடமாநிலத்தவர்கள் உற்சாகத்துடன் பண்டிகையை   கொண்டாடினர். குறிப்பாக ஸ்டேட் பாங்க் காலனி, ராயபுரம், சித்தப்பா கார்டன்   பகுதியில் வாழும் வடமாநிலத்தவர்கள், வீடுகளை அலங்கரித்து இறைவனை வணங்கி   அக்கம் பக்கத்தினருக்கு இனிப்பு வழங்கியும், வண்ணப்பொடிகள் கலந்த தண்ணீரை   ஒருவர் மீது ஒருவர் ஊற்றியும் மகிழ்ந்தனர்.

ராம்நகர், எம்.எஸ்.நகர், கொங்கு   மெயின்ரோடு, காதர்பேட்டை பகுதிகளில் ரோட்டில் திரண்ட இளைஞர்கள்   சாயப்பொடியை தூவிக்கொண்டு நடனமாடினர். அரிசிக்கடை வீதி,   யூனியன் மில் ரோடு, காலேஜ்ரோடு, புதுராமகிருஷ்ணாபுரம், மேட்டுப்பாளையம்,   புஷ்பாநகர், ஆலங்காடு என வடமாநிலத்தவர் அதிகம் வாழும் பகுதியில் ஹோலி   கொண்டாட்டம் களைகட்டி காணப்பட்டது. பண்டிகை கொண்டாடிய கொல்கத்தாவை சேர்ந்த பர்பாடி தாஸ் கூறும்போது,‘‘ ஹோலி பண்டிகையை ஆண்டுதோறும் உற்சாகமாக கொண்டாடுவோம். ஆனால் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு சென்றுவிட்டேன்.

இதனால் ஹோலி பண்டிகையை காலையிலேயே கொண்டாடிவிட்டு வேலைக்கு வந்து விட்டேன்’’ என்றார். ஒடிசாவை சேர்ந்த ஜியாண்டோ குமார் ஹரி கூறும்போது,

ஹோலி பண்டிகையை சிறப்பாக காலையிலேயே கொண்டாடி விட்டோம். இருப்பினும் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு சென்றதால், தற்போது விடுமுறையில் செல்லவில்லை. இருப்பினும் உடன் தங்கியிருந்தவர்களுடன் உற்சாகமாக காலையில் கொண்டாடினோம். எந்த ஒரு அச்சமும் இன்றி சிறப்பாக கொண்டாடினோம்’’ என்றார்.

ராஜஸ்தானை சேர்ந்த பர்சந்த் கூறும்போது, ‘‘வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவி வந்தது. அது போன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. ஹோலி பண்டிகையை திரும்பும் திசையெங்கும் வடமாநிலத்தினர் பலரும் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். இதனை பார்க்கிற தமிழர்கள் கூட சிரித்தபடி ஹோலி பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்து செல்கிறார்கள்’’ என்றார்.ஒடிசாவை சேர்ந்த கிஷோர் பேரா கூறும்போது, ‘‘வடமாநில தொழிலாளர்கள் அனைவரும் தங்கியிருக்கும் பகுதியில் காலையில் ஹோலி பண்டிகை கொண்டாடிவிட்டு வேலைக்கு வந்துவிட்டோம். இங்கு நிறுவனத்தில் வேலை செய்கிற தமிழ்நாடு தொழிலாளர்கள் பலரும் ஹோலி பண்டிகை வாழ்த்து தெரிவித்தனர்.

வடமாநில தொழிலாளர்கள் பலரும் திருப்பூரில் பல இடங்களில் உற்சாகமாக பண்டிகையை கொண்டாடினர். எந்த ஒரு அச்சுறுத்தலும் தொழிலாளர்களுக்கு இல்லை’’ என்றார்.

ஈரோடு:  ஈரோட்டில் வடமாநிலத்தவர்கள்   அதிகம் வசிக்கும் இந்திரா நகர், என்.எம்.எஸ்.காம்பவுண்ட் உள்ளிட்ட பல்வேறு   பகுதிகளில் நேற்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.

இளைஞர்கள்,   சிறுவர், சிறுமியர், பெண்கள் என அனைவரும் ஒருவர் மீது ஒருவர்   வண்ணப்பொடிகளை பூசியும், பலுான்களில் வண்ணங்களால் ஆன தண்ணீரை  நிரப்பி,   ஒருவர் மீது ஒருவர் வீசி அடித்தும், டிரம்ஸ் உள்ளிட்ட இசை கருவிகளை   இசைத்தும் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.சில வீடுகளில்   குழந்தை பிறந்து முதலாவது ஹோலியை கொண்டாடுவதால் அக்குழந்தைகள் உள்ள   வீடுகளில் அப்பகுதியினர் கூடி, பூஜைகள் செய்து, அந்தக் குழந்தைக்கு வணணம்   பூசி, இனிப்புகள் வழங்கினர்.

ஈரோட்டில் வசிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சம்பாலா, கிஷோர் ஆகியோர் கூறுகையில், ‘‘ஒற்றுமை திருவிழாவாக இவ்விழாவை கொண்டாடுகிறோம்.   ராஜஸ்தானில் எப்படி கொண்டாடுவோமோ அதே மகிழ்ச்சியுடன் இங்கு   கொண்டாடுகிறோம். வடமாநிலத்தவர்களுக்கு இங்கு முழு பாதுகாப்பு உள்ளது.   இங்குள்ளவர்களுடன் நாங்கள் ஒற்றுமையாக வாழ்கிறோம். எப்போதும்போல இந்த   ஆண்டும் ஹோலி பண்டிகை மற்றும் அதற்கு முதல் நாள் பண்டிகையையும் உற்சாகமாக   கொண்டாடி வருகிறோம்” என்றனர்.

கோவை:  கோவையில் வட  இந்தியவர்கள் வசிக்கும் ஆர்.எஸ்.புரம், சுக்கிரவார் பேட்டை, சாய்பாபா காலனி  உள்ளிட்ட பகுதிகளில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. ஏராளமான  வடமாநிலத்தவர்கள் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் வண்ணப்பொடிகளை பூசி  கொண்டும், கடவுளை வேண்டி பாடல்கள் பாடி பாரம்பரிய நடமாடினர்.  செல்போன்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Related Stories: