×

ஆண்டுக்கு 10 பேர் வரை டிஸ்மிஸ் ஆகிறார்கள்; பணம், மது, மாது ஆசைகாட்டி சிறை வார்டன்களை சிக்க வைக்கும் கைதிகள்: அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்

சேலம்: பணம், மது, மாது என ஆசைகாட்டி வலை விரிக்கும் கைதிகளால் சிறைவார்டன்களின் வாழ்க்கை பாழாகி வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஆசையே துன்பத்திற்கு காரணம். ஆசையை நீக்கினால் துன்பமின்றி வாழலாம். இந்த பொன் மொழியை கடைபிடிப்பவர்களின் வாழ்க்கையில் வசந்தம் வீசும். ஆனால் ஆசையை தூண்டி வார்டன்களை வலையில் சிக்க வைக்கும் ேவலையை சமீபகாலமாக சிறை கைதிகள் செவ்வனே செய்து வருகின்றனராம். வெளி உலகில் குற்றங்களை செய்து சிறைக்கு செல்வோரை அடக்குவது சிறையாகும்.

சிறையில் சென்று திருந்தி வந்தவர்களும் இருக்கிறார்கள். கூடா நட்பால் வாழ்க்கை முழுவதும் வீணாகி போகும் சம்பவங்களும் சிறைக்குள் நடக்கிறது. இது ஒருபுறமிருக்க கைதிகள் விரிக்கும் ஆசை வலையில் சிறை வார்டன்கள் சிக்கி, வேலையை இழந்து வாழ்க்கையில் தள்ளாடும் நிலைக்கு வரும் சம்பவங்களும் தொடர்கிறது. இதனை மெய்ப்பிக்கும் சம்பவம் சேலம் மத்திய சிறையில் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மத்திய சிறையில் சமீபத்தில் 2 சிறை வார்டன்கள் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

பரோலில் சென்ற கைதி திரும்பி வரும்போது, சிறையின் முன்பிருந்து வார்டன் ஒருவர், அவரை டூவீலரில் அழைத்து சென்று விட்டார். இது குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், தப்பிய கைதியுடன் அந்த வார்டனுக்கு தொடர்பு  இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து வார்டனை அதிரடியாக டிஸ்மிஸ் செய்தனர். இந்த விவகாரத்தில் இன்னும் சில அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தாலும் அவர்கள் சந்தேக வலையில் இருக்கிறார்கள்.
அதே போல சிறையில் இருந்து வெளியே வரும் கைதியை போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க வைக்கும் வகையில் சிறையின் கேன்டீன் கதவை திறந்துவிட்ட சிறை வார்டனும் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

இதற்காக அவர் கைதியிடம் இருந்து ₹20 ஆயிரம் வாங்கியதாக குற்றச்சாட்டுகள் இருக்கிறது. கைதிகளுக்கு கஞ்சா கொடுத்தல், செல்போன் வழங்குதல் போன்ற சம்பவங்களிலும் வார்டன்கள் டிஸ்மிஸ் செய்யப்படுகின்றனர். சிறைக்கைதிகளை அன்போடு நடத்த வேண்டும் என்பதால் கைதிகளிடம் வார்டன்கள் குறைகளை கேட்பார்கள். அப்போது வார்டன்களின் குடும்ப நிலவரத்தை தெரிந்து கொள்ளும் கைதிகள், அவர்களுக்கு ஆசை வார்த்தைகளை கூறுகின்றனர். என்ன தேவை என்றாலும் தன்னிடம் தெரிவிக்குமாறு கூறும் கைதிகள், அவர்களின் மனதில் ஆசையை விதைக்கிறார்கள்.

அவர்கள் கூறுகிறபடியே தேவையான பணத்தையும், மதுபாட்டிலையும் கொடுத்து தங்களின் வலையில் வீழ்த்துகிறார்கள். ஒரு சில இடங்களில் பெண்களை சப்ளை செய்யும் சம்பவமும் நடப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு ஒரு முறை கைநீட்டி காசு வாங்கி விட்டால், அதன்பிறகு கைதி சொல்வதை வார்டன்கள் கேட்கும் நிலை ஏற்படுகிறது. அவர்கள் சொல்லும் வேலையை செய்ய வேண்டிய கட்டாயமும் உருவாகிறது. ஓசியில் கிடைக்கிறது என்பதால் சில வார்டன்கள் கைதிகள் விரிக்கும் மாயவலையில் விழுகிறார்கள்.

பின்னர் இவர்கள் கேட்கும் வேலையை செய்து கடைசியில் வாழ்க்கையையே இழக்கும் நிலையும் ஏற்படுகிறது. கைதிகளிடம் அளவோடு பழகி கொள்ள வேண்டும். சட்டத்திற்குட்பட்டு அவர்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டுமோ அதை மட்டுமே செய்ய வேண்டும். சிறையில் இருந்து வெளியே வந்தாலும்  தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்க வேண்டும் என வார்டன்களுக்கு அதிகாரிகள் அறிவுரையும் கூறுகின்றனர். அதையும் தாண்டி, பல வார்டன்கள் ஆசை வலையில் வீழ்ந்து வாழ்வை தொலைக்கின்றனர்.

இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘தமிழ்நாட்டில் 9 மத்திய சிறை, 5 பெண்கள் தனிச்சிறை, 14 மாவட்ட சிறை, சிறப்பு சப்-சிறை 4, திறந்த வெளிச்சிறை 3 மற்றும் 104 கிளைச்சிறைகள் உள்ளது. இதில் சுமார் 20 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறை டிஐஜியில் இருந்து வார்டன்கள் வரை 3 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். போலீசாருக்கான சம்பளம் வார்டன்களுக்கு வழங்கப்பட்டாலும், சில சலுகைகள் மிகவும் குறைவாக இருக்கிறது. போலீசாருக்கு வழங்கும் சலுகைகளை சிறைப்பணியாளர்களுக்கும் முழுமையாக வழங்க வேண்டும்.

அதே போல நன்றாக வேலை செய்யும் வார்டன்கள் மீது வேண்டும் என்றே பொய்யாக குற்றச்சாட்டை கைதிகள் கூறுவார்கள். வார்டன்களை அதிகாரிகள் கண்டித்து விடுவதால், நன்றாக வேலை செய்யும் வார்டன்களும் வேலையில் சுணக்கத்தை கடைபிடிக்கிறார்கள். இதனால் சிறை கைதிகளின் ஆட்டம் அதிகரிக்கிறது. விலை உயர்ந்த பைக், நவீன செல்போன், ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டால் வாழ்க்கை வீணாகி போய்விடும்.

இதற்கு ஆசைப்பட்டு கைதிகளுடன் தொடர்பு வைத்து கொண்டு தவறான பழக்கத்தை ஏற்படுத்தி கொள்கிறார்கள். இதன் காரணமாகவே அவர்கள் வேலைகளில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுகின்றனர். ஆண்டுதோறும் 10க்கும் மேற்பட்ட வார்டன்கள் இந்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்’ என்றனர்.

Tags : Up to 10 people are dismissed per year; Prisoners trap jail wardens by demanding money, alcohol, liquor: Officials shocking information
× RELATED காணும் பொங்கலன்று பைக் ரேஸில்...