×

வங்கதேசத்தில் இருந்து சென்னைக்கு வந்தபோது நடுவானில் விமானத்தில் பெண் திடீர் சாவு

மீனம்பாக்கம்: வங்கதேசத்தில் இருந்து சென்னைக்கு மருத்துவ சிகிச்சைக்காக கணவருடன் வந்த பெண், நடுவானில் விமானம் பறந்தபோது நெஞ்சு வலியால் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். வங்கதேசத்தை சேர்ந்தவர் முகமது அபு. இவரது மனைவி குர்ஸிதா பேகம் (43). இவர், கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அங்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

இதனால் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து விமானம் மூலமாக நேற்று மாலை சென்னைக்கு முகமது அபுவும் அவரது மனைவி குர்ஸிதா பேகமும் வந்து கொண்டிருந்தனர். இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, குர்ஸிதா பேகத்துக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு துடித்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் விமானி, சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சென்னை விமானநிலையத்தில் மருத்துவக் குழுவினர் தயார்நிலையில் இருந்தனர்.

அந்த விமானம் நேற்றிரவு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானத்துக்குள் மருத்துவக் குழுவினர் சென்று, குர்ஸிதா பேகத்தை பரிசோதித்தனர். இதில், அவர் விமானம் பறந்து கொண்டிருந்தபோது இருக்கையில் அமர்ந்த நிலையிலேயே உயிரிழந்தது தெரியவந்தது. சென்னை விமானநிலைய போலீசார், குர்ஸிதா பேகத்தின் சடலத்தை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Chennai ,Bangladesh , A woman died suddenly in mid-air while arriving in Chennai from Bangladesh
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...