×

தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு: 200 பேரை ரகசியமாக கண்காணிக்கிறது என்ஐஏ

கோவை: கோவையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு வைத்துள்ளதாக சந்தேகிக்கப்படும் 200 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள். கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் அருகே கடந்தாண்டு அக்டோபர் 23ம் தேதி கார் வெடித்தது. இதில் காருக்குள் இருந்த ஜமேஷா முபின் (27) பலியானார். அவருடைய வீட்டில் போலீசார் சோதனை செய்ததில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) வசம் ஒப்படைக்கப்பட்டது.

அப்சர்கான், இஸ்மாயில், அசாருதீன், முகமது பாரூக் உள்பட 11 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணையில், உயிரிழந்த ஜமேஷா முபினுக்கு தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதும், சத்தியமங்கலம் வனப்பகுதியில் ரகசிய கூட்டம் நடத்தியதும் தெரியவந்தது. இந்நிலையில் கோவையில் 200 பேர் ரகசியமாக கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தடை செய்யப்பட்ட அமைப்புகளின் தொடர்புடையவர்கள், ஆதரவானவர்கள் குறித்து கண்காணிக்கப்பட்டது. அதில் 200 பேர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அவர்கள் சமூக வலைதளத்தில் எந்த மாதிரியான கருத்துக்களை பதிவிட்டுள்ளார்கள்? பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து கண்காணித்து வருகிறோம். ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் இணைய தள பக்கத்தை யாரேனும் பதிவிறக்கம் செய்து உள்ளனரா? ஆதரவு வாசகங்களை பதிவிட்டு உள்ளார்களா? என்பது குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கோவை கார் வெடிப்பு சம்பவத்துக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது உண்மைதானா? அல்லது அமைப்பின் பெயரில் வேறு யாராவது வெளியிட்டார்களா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பான கருத்துக்களை யாராவது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளார்களா? எனவும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : NIA , Contact with banned organisations: NIA secretly monitors 200 people
× RELATED பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு...