உழைப்புக்கு ஏது ஆண், பெண் வித்தியாசம்? இறைச்சி கடை பணியில் இறங்கி அடிக்கும் பெண்-விருதுநகர் பொதுமக்கள் வியப்பு

விருதுநகர் : விருதுநகரில் ஆட்டிறைச்சியை நேர்த்தியாகவும், வேகமாகவும் வெட்டி விற்பனை செய்து, கடும் உழைப்பால் தனது குடும்பத்துக்கு வருமானம் ஈட்டி வரும் பெண்ணை, பலரும் வியந்து பாராட்டிச் செல்கின்றனர்.பெண்களின் சாதனைகள் மற்றும் வெற்றிகளை போற்றும் வகையில் உலகம் முழுவதும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார நடவடிக்கைகளில் ஆணும், பெண்ணும் சமம் எனும் சமத்துவத்துவத்தை மெய்ப்பிக்க வேண்டும் என்பதே சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம். அந்த வகையில் விருதுநகரில் பெண் ஒருவர் ஆட்டிறைச்சியை நேர்த்தியாகவும், வேகமாகவும் வெட்டி விற்பனை செய்து, தனது குடும்பத்துக்கு வருமானம் ஈட்டி வருகிறார்.

விருதுநகர் வாடியான் தெருவை சேர்ந்தவர் ஜோதி (42). இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இறைச்சிக் கடை அப்பகுதியில் உள்ளது. அந்த கடையில் ஜோதியும் ஒரு முக்கியமான பணியாளர். கத்தியை பிடித்து இறைச்சியை கடகடவென துண்டு, துண்டாக வெட்டி, வாடிக்கையாளர்களுக்கு தரும் பணியை செய்து வருகிறார். பெண் ஒருவர் இறைச்சி வெட்டித் தருவதை அப்பகுதிக்கு புதிதாக வரும் மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

ஜோதி கூறுகையில், ‘‘எங்கள் கடையில் வேலை பார்க்கும் ஆண்கள் திருமணம், காது குத்து மற்றும் திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகளுக்கு சென்று, அங்கேயே ஆடுகளை வெட்டி, இறைச்சியாக துண்டு போட்டு கொடுப்பார்கள். ஓட்டல்களுக்கும் நேரில் சென்று, இந்தப் பணியை செய்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் செல்லும் நாட்களில், கடையில் போதிய பணியாளர்கள் இல்லாமல், வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. எனவே. நானே இறைச்சி வெட்டி தரும் பணியை செய்வது என முடிவெடுத்தேன். குடும்பத்தினரிடம் எனது விருப்பத்தை தெரிவித்தேன். அவர்கள் இறைச்சியை எவ்வாறு எந்தெந்த கத்திகள் மூலம் வெட்ட முடியும் என எனக்கு பயிற்சி அளித்தனர். இப்போது இந்த வேலை மிகவும் எளிதாகி விட்டது.

மேலும் மற்ற கடைகளை விட எங்கள் கடையில் ஆட்டிறைச்சி ஒரு கிலோவுக்கு ரூ.200 வரை குறைவாக விலை வைத்து விற்பனை செய்கிறோம். இதனால், எங்களது கடைக்கு வாடிக்கையாளர்களும் அதிகமாக வருகின்றனர்’’ என்று தெரிவித்தார்.

Related Stories: