×

ஐடி விங் நிர்வாகிகள் அதிமுகவில் சேர்ந்த நிலையில் பாஜகவினரை இழுக்க எடப்பாடி பழனிசாமி தனி குழு..!

சென்னை: பாஜகவினரை அதிமுகவில் சேர்க்க எடப்பாடி பழனிச்சாமி தனி குழு அமைத்துள்ளார். இந்தக்குழுவினரின் நடவடிக்கையால் இன்றும் 2 பேர் அதிமுகவில் சேர்ந்துள்ளனர். இது இரு கட்சியினரிடையே மோதலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தநிலையில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலையில் தீவிர ஆலோசனை நடத்தினார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக 4 அணிகளாக உடைந்துள்ளன. அதில் டிடிவி தினகரன் மட்டும் தனிக்கட்சி தொடங்கி நடத்தி வருகிறார். சசிகலாவோ அதிமுகவின் பொதுச் செயலாளர் நான்தான் என்று கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அதேநேரத்தில் அதிமுக தங்களுக்குத்தான் சொந்தம் என்று எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கூறி வருகின்றனர். அதில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு பொதுவானவர்களாக பாஜக காட்டிக் கொண்டுள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் எப்போது தமிழகம் வந்தாலும் இருவரையும் தனித்தனியாக சந்தித்து வந்தனர். இருவரும் எப்போது வேண்டுமானாலும் டெல்லி சென்று சந்திக்கலாம் என்ற நிலை உள்ளது. தற்போது அதிமுக நிர்வாகிகளைப் பொறுத்தவரை எடப்பாடி அணியில்தான் அதிகமாக உள்ளனர்.

இதனால் தங்களுக்கு ஆதரவு தராமல் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தருவதாக எடப்பாடி பழனிச்சாமி கருதி வந்தார். இந்தநிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்தது. இதனால் இரு அணிகளுக்கும் ஆதரவு தராமல் அண்ணாமலை இருந்தார். இதனால் எடப்பாடி பழனிச்சாமி கடும் அதிருப்தி அடைந்தார். எடப்பாடி பழனிச்சாமி, போனில் அண்ணாமலையிடம் ஆதரவு கேட்டபோது மாலையில் ஆதரவு அறிவிப்பு வெளியிடுவதாக கூறியவர், திடீரென மாலையில் யாருக்கு ஆதரவு என்பதை ஓரிரு நாளில் அறிவிக்கிறேன் என்று கூறி 10 நாட்களுக்கும் மேலாக இழுத்தடித்து வந்தார்.

ஒரு கட்டத்தில் பாஜகவின் ஆதரவு தேவையில்லை. அவர்கள் இல்லாமல் வேலையை பாருங்கள். மோடி, அமித்ஷா, அண்ணாமலை படம் இல்லாமல் வேலையை பாருங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து விட்டார். இதனால்தான் ஆரம்பத்தில் பேனர்களில் அவர்களது படங்கள் இல்லாமல் இருந்தது. பின்னர் அண்ணாமலை அறிவித்தாலும், அவர்கள் கொடி இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களை கூட்டுச் சேர்க்க வேண்டாம். தனியாக சென்று பிரசாரம் செய்யுங்கள் என்று எடப்பாடி கூறினார். அண்ணாமலை பிரசாரத்துக்கு வந்தபோதும் அதிமுக நிர்வாகிகள் அவருடன் பெரிய அளவில் கலந்து கொள்ளவில்லை. கூட்டமும் சேர்க்கவில்லை. இதனால் அண்ணாமலை அதிருப்தி அடைந்தார்.

இவ்வாறு இரு கட்சியினருக்கும் இடையே மோதல் இருந்தது. தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு அதிமுகவினரிடையே ஒற்றுமை இல்லை. பிரிந்து இருந்ததால்தான் இப்படி ஒரு மிகப் பெரிய தோல்வியை சந்திக்க நேர்ந்தது என்று அண்ணாமலை கூறினார். இதற்கு அதிமுக நிர்வாகிகள் செங்கோட்டையன், கே.பி.முனுசாமி ஆகியோர் பதிலடி கொடுத்தனர். இந்த மோதல் இருந்தநிலையில்தான் அண்ணாமலைக்கு நெருக்கமான ஐடி விங் நிர்வாகி சி.டி.நிர்மல்குமார், அதிமுகவில் இணைந்து அதிர்ச்சி கொடுத்தார். அவரது ஆதரவாளரும் மாநில நிர்வாகியுமான திலிப்  கண்ணன் அதிமுகவில் இணைந்தார்.

இதனால் கடும் கோபமடைந்த அண்ணாமலை, எதற்கும் எதிர் வினை உண்டு என்று பதிலடி கொடுத்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ, செய்கையில் பதிலடி கொடுக்க ஆரம்பித்தார். பாஜக நிர்வாகிகளை இழுக்க அதிமுகவில் ஒரு குழுவை நியமித்துள்ளார். இந்தக் குழு பாஜகவில் அதிருப்தியில் குறிப்பாக அண்ணாமலையால் பாதிக்கப்பட்டு அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அதைத் தொடர்ந்து நேற்று பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் அம்மு (எ)ஜோதி, திருச்சி புறநகர் மாவட்ட துணை தலைவர் டி.விஜய் ஆகியோர் அதிமுகவில் இணைந்தனர்.

இந்தநிலையில்,  பாஜக உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு மாநில செயலாளர் லதா, உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு ஒன்றிய தலைவர் வைதேகி ஆகியோர் இன்று அதிமுகவில் இணைந்தனர். இந்த இணைப்பு இனி தொடரும் என்று அதிமுக தலைவர்கள் அறிவித்துள்ளனர். பாஜகவை உடைத்து அண்ணாமலைக்கு ஷாக் கொடுக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு செயல்பட்டு வருவது அண்ணாமலைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால்தான், எடப்பாடிக்கு எதிராக செயல்படுவது குறித்து அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வத்தை பெரியகுளத்தில் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்தநிலையில், சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி மூத்த நிர்வாகிகளுடன் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலையில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பாஜகவுடன் ஏற்பட்டுள்ள மோதல் குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

Tags : Edappadi Palaniswami's separate group to pull BJP while IT wing executives joined AIADMK..!
× RELATED கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும்...