குடிநீர் கட்டணங்களை டிஜிட்டல் முறையில் செலுத்துவதை ஊக்குவிக்க ஏப்-1 முதல் நுகர்வோர் அட்டை வழங்கப்படாது: குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை: குடிநீர் கட்டணங்களை செலுத்த ஏப்-1 முதல் நுகர்வோர் அட்டை வழங்கப்படாது என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. குடிநீர் கட்டணங்களை டிஜிட்டல் முறையில் செலுத்துவதை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரிசையில் காத்திருக்கும் நேரத்தை தவிர்க்க மற்றும் காகித பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள நுகர்வோர் அட்டையில் எந்த பதிவும் செய்யப்படமாட்டாது என்று தெரிவித்துள்ளனர். நுகர்வோர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறி நுகர்வோர் அட்டை சென்னை குடிநீர் வாரியத்தால் வழங்கப்படுகிறது.  

சென்னை குடிநீர் வாரியத்தின் நுகர்வோர்கள் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்துவதை டிஜிட்டல் கட்டண முறையில் ஊக்குவிக்கவும், வரிசையில் காத்திருக்கும் நேரத்தைத் தவிர்க்க மற்றும் காகிதப் பயன்பாட்டைக் குறைக்கவும் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய நுகர்வோர் அட்டை வழங்கப்படமாட்டாது எனவும், ஏற்கனவே உள்ள நுகர்வோர் அட்டையில் எந்த பதிவும் செய்யப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நுகர்வோர்களுக்கு 5 வருடங்களுக்கு ஒருமுறை நுகர்வோர் அட்டை சென்னை குடிநீர் வாரியத்தால் வழங்கப்படுகிறது.  தற்போது, 2020-ஆம் ஆண்டின் I/2020-21 முதல் II/2024-25 வரையிலான கால கட்டத்திற்கு அனைத்து நுகர்வோர்களுக்கும் நுகர்வோர் அட்டை வழங்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், சென்னை குடிநீர் வாரியம், குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை வசூலிக்கும் முறையினை நவீன இணைய அமைப்பிற்கேற்ப மேம்படுத்தியுள்ளது.

எனவே, இணைய வழியிலான  கட்டண நுழைவாயிலைப் பயன்படுத்தி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாக செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  மேலும், UPI, QR குறியீடு மற்றும் PoS போன்ற பிற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்தவும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இணைய வசதி மூலம் நுகர்வோர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை தெரிந்துகொள்ளவும், பணம் செலுத்திய இரசீதினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் இயலும். மேலும், வசூல் மையத்தில் பணம் செலுத்தும்போது அளிக்கப்படும் கணினி இரசீது பணம் செலுத்தியதற்கான பதிவாக கருதப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

Related Stories: