×

திரிபுரா மாநில முதலமைச்சராக 2-வது முறையாக மாணிக் சாஹா பதவியேற்பு!!

அகர்தலா : திரிபுரா மாநில முதலமைச்சராக 2-வது முறையாக மாணிக் சாஹா பதவியேற்றுள்ளார். 60 உறுப்பினர்கள் கொண்ட திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மார்ச் 2ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் 32 இடங்களை பிடித்து பா.ஜ மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. ஆனால் முதல்வர் தேர்வில் இழுபறி ஏற்பட்டது. பெரும்பாலான பா.ஜ எம்எல்ஏக்கள் முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேப்பிற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதையடுத்து தற்போதைய முதல்வராக உள்ள மாணிக் சகா மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதுதொடர்பாக பா.ஜ எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் அகர்தலாவில் நடந்தது. இந்த கூட்டத்தில் புதிய முதல்வராக மீண்டும் மாணிக் சகா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து திரிபுரா ஆளுநர் சத்யதேவ் நாராயணனை சந்தித்த மாணிக் சஹா ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இந்த நிலையில், அகர்தலாவில் உள்ள சுவாமி விவேகானந்தர் மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் திரிபுரா மாநில முதலமைச்சராக 2-வது முறையாக மாணிக் சாஹா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் சத்யதேவ் நாராயணன் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். டிங்கு ராய், பிகாஷ் டெபர்மன், சுதங்கஷுன் தாஸ், சுக்லா சரண் நோட்டி, ரத்தன் லால் நாத், பிரஞ்சித் சிங் ராய், சந்தனா சக்மன், சுஷாந்த் சவுத்ரி ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரும் பங்கேற்றனர்.



Tags : Manik Saha ,Chief Minister ,Tripura , Tripura, Manik Saha, sworn in
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...