×

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய 3 பேர் கைது... தவறுக்கு மன்னிப்பு கோரி மனோஜ் யாதவ் வீடியோ வெளியீடு!!

சென்னை: தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு அடுத்த புத்தேரியில் கடந்த 6 மாதங்களாக ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் யாதவ் (43), சந்தன், சுராஜ் திவாரி, சந்தோஷ் சவுத்ரி, சஞ்சய் சர்மா, சிந்து ராம், அனுஜ் குமார் ஆகிய 7 பேர் வேலை செய்து வருகின்றனர்.

இவர்களில் மனோஜ்  யாதவ், ‘‘தமிழ்நாட்டில் தற்போது எங்களை அடிக்கிறார்கள். மருத்துவமனைக்கு சென்றால் மருத்துவம் பார்ப்பதில்லை. நாங்கள் எப்படி ஊருக்கு  வருவது என தெரியவில்லை. இதற்கு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும்’’ என சமூக வலைத்தளத்தில் வீடியோ  வெளியிட்டு அதை ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு அனுப்பியுள்ளார். பிறகு, அங்குள்ள ஒரு சில  பத்திரிகையில் செய்தி வெளியிட்டு உள்ளார்கள். அந்த செய்தியை இங்கே உள்ள  நபர்களிடம் காட்டி உள்ளார்.

இதுபற்றி அறிந்த கட்டிட தொழில் மேலாளர் முத்து  என்பவர் மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மறைமலைநகர் போலீசார் மனோஜ் யாதவை கைது செய்து 5 பிரிவின் கீழ் வழக்கு  பதிவு செய்தனர். மேலும் அவருடன் வேலை செய்து வந்த 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து  தேடி வருகின்றனர். தாம் செய்த தவறுக்கு அவர் இந்தியில் மன்னிப்பு கோரிய வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

இதுபோல, திருப்பூர் மாநகர சைபர் க்ரைம் போலீசார், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஷ்குமார் (25) என்பவருடைய டிவிட்டர் கணக்கில் வேறு மாநிலங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை தமிழ்நாட்டில் நடந்ததுபோன்று போலியான வீடியோக்களை சித்தரித்து பதிவிட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து சைபர் க்ரைம் போலீசார் அவரை கைது செய்து திருப்பூர்அழைத்த வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் வதந்தி பரப்பியவர்களை கைது செய்ய கோவை மற்றும் திருச்செந்தூர் போலீசார் பீகாரில் முகாமிட்டுள்ள நிலையில், பீகார் போலீசார் ஒருவரை கைது செய்துள்ளார்.



Tags : Northern ,Manoj Yadav , Workers, rumors, arrests
× RELATED வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு...