நுண்துளை சிகிச்சை மூலம் மூளையில் உறைந்த ரத்தத்தை அகற்றி பக்கவாதம் வராமல் தடுக்க சிகிச்சை: அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை சாதனை

சென்னை: தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிரதாப் (36) என்பவருக்கு, நுண்துளை மூலம் மூளையின் ரத்தநாளத்தில் உறைந்த ரத்தத்தை அகற்றி பக்கவாதம் வராமல் தடுத்த மருத்துவக் குழுவினரை நேரில் சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். நிகழ்வில் மருத்துவக் கல்வி இயக்குநர் சாந்திமலர், தமிழ்நாடு அரசு  பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் விமலா, ஒருங்கிணைப்பு  அலுவலர் ஆனந்த் குமார், நரம்பியல் துறைத் தலைவர் பூபதி, நுண்துளை நரம்பியல்  கதிரியக்க சிகிச்சை நிபுணர் பெரியகருப்பன், உயர் மருத்துவர்கள்,  செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கலந்துக் கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ‘‘அரசு மருத்துவமனைகளுக்கு கடந்தாண்டு மட்டும் ரத்தம் உறைதலினால் பக்கவாதம் என்னும் பாதிப்புகளுக்குள்ளாகி சிகிச்சைக்கு வந்தவர்களுடைய எண்ணிக்கை 14,784 பேர். மேலும், ரத்தம் கசிவினால் பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனைகளுக்கு வந்தவர்களுடைய எண்ணிக்கை 4,858 பேர் ஆகும். இதில் குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனைக்கு வந்து பக்கவாதத்திலிருந்து மீண்டவர்கள் 314 பேர். மீதமுள்ளவர்களுக்கு சிகிச்சைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2019ம் ஆண்டு 98 பேரும், 2020ம் ஆண்டில் 106 பேரும் இத்தகைய பக்கவாத பாதிப்புகள் ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்திருந்தனர். பிரதாப் (36) என்பவர் இடது பக்க கை மற்றும் கால் பலவீனத்துடன் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பக்கவாதம் ஏற்பட்டு 3 மணி நேரத்திற்குள் அழைத்துவரப்பட்டதால் மெக்கானிக்கல் த்ரோம்பேக்டமி என்னும் உறைந்த ரத்தத்தினை அகற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை அளித்தபின் மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் உள்ள அடைப்பு முழுமையாக அகற்றப்பட்டது. சிகிச்சைக்கு பின்பு 90% குணமடைந்தார். நுண்துளை ரத்தநாள அறுவை சிகிச்சை முடிந்த மறுநாளே நோயாளியால் இடது பக்க கால் மற்றும் கையை அசைக்கவும் எழுந்து நடக்கவும் முடிந்தது. தனியார் மருத்துவமனையில் 6 முதல் 8 லட்சம் வரை செலவாகும் இச்சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்பட்டு வருகிறது. இந்த பிரத்யேக சிகிச்சையினை மேற்கொண்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: