ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் படுதோல்வி எதிரொலி பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற முடிவு?: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நாளை விவாதிக்க திட்டம்

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி காரணமாக, பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நாளை எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நடைபெறும் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் விவாதிக்க முடிவு செய்ய்யப்பட உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2ம் தேதி எண்ணப்பட்டது. இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தென்னரசு வெறும் 43,923 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தார். திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். திமுக கூட்டணி வேட்பாளர் கடந்த தேர்தலைவிட இரண்டு மடங்கு அதிக வாக்குகளை பெற்றுள்ளார். அதிமுகவின் இந்த தோல்வி, அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என இரு பிரிவாக செயல்பட்டு வந்தனர்.

ஆனால், தன்னிடம் உள்ள நிர்வாகிகள் செல்வாக்குடன் அதிமுக கட்சியையும் கைப்பற்ற கடந்த இரண்டு வருடமாக போராடி வந்தார். இந்த நிலையில்தான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் சென்று இரட்டை இலை சின்னத்தையும் எடப்பாடியே கைப்பற்றினார். இதனால் உற்சாகம் அடைந்த எடப்பாடி அணியினர் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றிபெறாவிட்டாலும், கனிசமான வாக்கை பெற்றுவிடலாம் என்று மனக்கோட்டை கட்டி இருந்தனர். ஆனால், வழக்கம்போல் கடந்த பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தலில் கொடுத்த தோல்வியைபோல் ஈரோடு கிழக்கு தொகுதியிலும் படுதோல்வியை அதிமுகவுக்கு பொதுமக்கள் பரிசாக அளித்தனர். அதிமுக படுதோல்வியால் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் விரக்தி அடைந்துள்ளனர். அதிமுக கூட்டணியில் பாஜ நீடிப்பதால்தான் தமிழக மக்கள் அதிமுகவை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தபோது, முன்னாள் அதிமுக அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் ஆகியோர் பாஜவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக தோல்வி அடைந்தது என்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டினர். ஆனாலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜவுடன் கூட்டணி அமைத்தே அதிமுக போட்டியிட்டது. தற்போதும் தோல்வி அடைந்தது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, “மக்கள் நேசிக்கும் இயக்கமாக என்றைக்கும் அதிமுக வலிமையுடன் நிலைத்திருக்கும். தொடர்ந்து பாஜவுடன் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்ய வேண்டியது. இதில் அதிமுக தெளிவாக இருக்கிறது” என்றார். இந்த நிலையில்தான் கடந்த இரண்டு நாட்களாக பாஜ முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து வெளியேறி அதிமுகவில் சேர்ந்து வருகிறார்கள். தமிழக பாஜ ஐடி விங் தலைவராக இருந்த சி.டி.நிர்மல்குமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதேபோன்று தமிழக பாஜ ஐடி விங் மாநில செயலாளர் திலிப் கண்ணனும் அக்கட்சியில் இருந்து விலகி நேற்று அதிமுகவில் இணைந்துள்ளது.

இது தமிழக பாஜ தலைமைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோபம் அடைந்த தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, எங்கள் கட்சி தலைவர்கள் இணைத்துதான் அதிமுகவை வளர்க்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது என்று கடுமையாக சாடியுள்ளார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை (9ம் தேதி) சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஏற்பட்ட படுதோல்வி குறித்து மாவட்ட செயலாளர்கள் பலரும் கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஜெயலலிதா இருக்கும் வரை பாஜவுடன் அவர் விலகியே இருந்தார். ஆனால், எடப்பாடி முதல்வராக பிறகு, அதிமுக அமைச்சர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறைக்க டெல்லி பாஜ துணை தேவைப்பட்டது.

இதனால் பாஜவும் தமிழகத்தில் கட்சியை வளர்க்க அதிமுகவை பகடைக்காயாக பயன்படுத்தி வந்தது. ஆனாலும் தொடர்ந்து பாஜ கூட்டணியில் இருந்து வெளியே வர முடியாமல் அதிமுக திணறி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நடைபெறும் ஒவ்வொரு தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது. அதனால், நாளை நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், வரும் தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் கூட்டணியில் இருந்து பாஜவை கழற்றி விட வேண்டும் என்று குரல் கொடுக்க பலரும் திட்டமிட்டுள்ளனர். அதனால் நாளை நடைபெறும் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களின் கோரிக்கையை ஏற்று பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற முடிவு எடுக்க வாய்ப்புள்ளது. இதனால் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

* எங்கள் கட்சி தலைவர்கள் இணைத்துதான் அதிமுகவை வளர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனஅண்ணாமலை, சாடியுள்ளார்.

Related Stories: