புற்று நோயால் பாதிக்கப்பட்டோருக்கு உயர் சிகிச்சை அளிப்பதற்கான நவீன உபகரணங்கள் வாங்குவதற்காக சன் பவுண்டேஷன் ஒரு கோடியே 74 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாக, ஏழை எளியோரின் கல்வி, மருத்துவ சிகிச்சை, சமூக மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் மற்றும் சன் டி.வி. பல்வேறு அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கி வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, புற்று நோயால் பாதிக்கப்பட்டோருக்கு உயர்தர சிகிச்சை அளிப்பதற்கான நவீன மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக அடையாறு புற்று நோய் மையத்துக்கு சன் பவுண்டேஷன் ஒரு கோடியே 73 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. இதற்கான காசோலையை, அடையாறு புற்றுநோய் மையத்தின் செயல் துணைத் தலைவர் டாக்டர் ஹேமந்த்ராஜ், சிஎஸ்ஆர் மேலாளர் ராஜசேகர் ஆகியோரிடம் சன் பவுண்டேஷன் சார்பில் காவேரி கலாநிதி மாறன் வழங்கினார்.
இந்த நிதியின் மூலம் அல்ட்ராச வுண்ட் மெஷின் உள்ளிட்ட அதிநவீன உபகரணங்கள் வாங்கப்படும் என்று டாக்டர் ஹேமந்த்ராஜ் தெரிவித்தார். ஏழை எளியோருக்கு கல்வி, அடிப்படைக் கட்டமைப்புகள் மற்றும் கற்றல் சூழலை மேம்படுத்துதல், தரமான இலவச சிகிச்சை, மகளிர் மற்றும் இளைஞர் நலன், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக சன் டிவியும் சன் பவுண்டேஷனும் தொடர்ந்து நிதி உதவி அளித்து வருகின்றன. இத்திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் மற்றும் சன் டி.வி. இணைந்து இதுவரை சுமார்179 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
