×

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவின் பைனல் வாய்ப்பு?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறுமா? என்பதே ரசிகர்களின் ஆவல் மிகுந்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து வரும் பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டியிலும் அபாரமாக வென்ற இந்தியா, இந்தூரில் நடந்த 3வது டெஸ்டில் படுதோல்வியை சந்தித்தது பின்னடைவை கொடுத்தது. நம்பர் 1 ஆஸி. முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிவிட்ட நிலையில், இப்போது புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ள இந்தியாவுக்கும், 3வது இடத்தில் உள்ள இலங்கைக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

ஆஸி.க்கு எதிராக நாளை தொடங்கும் கடைசி டெஸ்டில் வென்றால் இந்தியா தொடர்ந்து 2வது முறையாக பைனலுக்கு முன்னேறிவிடும். ஒருவேளை எதிர்பாராத விதமாக இந்தியா தோற்றால் பைனல் வாய்ப்பு கேள்விக்குறிதான். நடப்பு சாம்பியன் நியூசிலாந்து - இலங்கை இடையே நடக்க உள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முடிவுதான் அதை தீர்மானிக்கும். அந்த தொடரில் இலங்கை 2-0 என நியூசி.யை ஒயிட்வாஷ் செய்ய வேண்டும். அப்படி செய்தால் இலங்கை பைனலுக்கு முன்னேறும். இலங்கை ஒரு டெஸ்டில் தோற்றாலும், ஏன் டிரா செய்தாலும் பைனல் வாய்ப்பு இந்தியாவுக்கே.

* இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் அகமதாபாத்தில் நாளை தொடங்குகிறது.

* நியூசிலாந்து - இலங்கை இடையிலான டெஸ்ட் தொடரும் நாளை தொடங்குகிறது. முதல் டெஸ்ட் கிறைஸ்ட்சர்ச்சிலும், 2வது டெஸ்ட் மார்ச் 17ம் தேதி வெலிங்டனிலும் தொடங்குகிறது.

* ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா 68.52 வெற்றி சதவீதத்துடன் முதல் இடத்தில் இருக்கிறது. இந்தியா 60.29, இலங்கை 53.33 வெற்றி சதவீதங்களுடன் முறையே 2வது, 3வது இடங்களில் காத்திருக்கின்றன.

* உலக டெஸ்ட் தொடரின் முதல் சாம்பியனும், நடப்பு சாம்பியனுமான நியூசிலாந்து 27.27 சதவீதத்துடன் 8வது இடத்தில் உள்ளது.

* நியூசிலாந்து மட்டுமின்றி தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், கடைசி இடத்தில் உள்ள வங்கதேசம் ஆகியவை ஏற்கனவே பைனல் வாய்ப்பை இழந்துவிட்டன.

* நடப்பு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இன்னும் தென் ஆப்ரிக்கா - வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து - இலங்கை, இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.

Tags : ICC World Test Championship ,India , ICC World Test Championship: India's final chance?
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!