மன்னார்குடி: மன்னார்குடியில் அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியை போலீசார் நேற்று கைது செய்தனர். திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் கடந்த 4ம் தேதி மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலை அறிவியல் கல்லூரியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. இதில், திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு, சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் டிஆர்பி ராஜா எம்எல்ஏ மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, நாம் தமிழர் கட்சி கையூட்டு ஒழிப்பு பாசறை மாநில தலைவர் மன்னார்குடியை சேர்ந்த ராமஅரவிந்தன் (54), கட்சியினருடன் வந்து முகாமில் பங்கேற்ற மாணவர்களிடம் பேசியதோடு அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் தலையிட்டு ராமஅரவிந்தன் உள்ளிட்ட கட்சியினரை வெளியே அனுப்பி வைத்தனர். பின்னர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சந்திரசேகர் புகாரின்படி மன்னார்குடி நகர போலீசார் வழக்குப் பதிந்து ராம அரவிந்தனை கைது செய்தனர். அவரது சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.