×

கும்மிடிப்பூண்டியில் உள்ள வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் உள்ள வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு நடந்து முடிந்தது. கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் வனத்துறையினர் வனசரக அலுவலர் வி.சுரேஷ்பாபு தலைமையில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பு நேற்றுடன் முடிந்தது. இதில், வனவர்கள் ஜெ.டில்லி, பி.முத்துகுமரன், வனகாப்பாளர்கள் டி.துர்காளி, ஆர்.கோபால், கே.வினோத்குமார், ஜி.பரணிதரன் உள்ளிட்ட வனத்துறையினர், பறவை பாதுகாவலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பங்கேற்றனர். நீர் வாழ் பறவைகள், நில வாழ் பறவைகள் என இரு பிரிவுகளாக கணக்கெடுப்புகள் நடைபெற்றன. முதல் கட்டமாக ஜனவரி மாதம் 29ம் தேதி நீர் நிலைகளில் உள்ள பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

இதில், பக்கிங்காம் கால்வாயில் 12 இனங்களை சேர்ந்த 755 பறவைகளும்,  பூவலம்பேடு ஏரியில் 8 இனங்களை சேர்ந்த 140 பறவைகளும், ஐயர் கண்டிகை ஏரியில் 8  இனங்களை சேர்ந்த 180 பறவைகளும், கீமளூர் ஏரியில் 8 இனங்களை சேர்ந்த 176 பறவைகளும், தாணிப்பூண்டி ஏரியில் 8 இனங்களை சேர்ந்த 125 பறவைகளும், கண்ணன்கோட்டை நீர்தேக்கத்தில் 13 இனங்களை சேர்ந்த 791 பறவைகளும், தேர்வாய் கண்டிகை ஏரியில் 12 இனங்களை சேர்ந்த 400 பறவைகளும், வாணிய மல்லி ஏரியில் 13 இனங்களை சேர்ந்த 248 பறவைகளும், மாநெல்லூர் ஏரியில் 12 இனங்களை சேர்ந்த 265 பறவைகளும், மாதர்பாக்கம் ஏரியில் 7 இனங்களை சேர்ந்த 115 பறவைகளும் கணக்கெடுக்கப்பட்டன.

கும்மிடிப்பூண்டி சரகத்தில் 10 பகுதிகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 101 பறவை இனங்களை சேர்ந்த 3,195 நீர் வாழ் பறவைகளை கணக்கெடுக்கப்பட்டது. அதேபோல் பிப்ரவரி மாதம் நில வாழ் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில்,  பக்கிங்காம் கால்வாய் பகுதியில் 28 இனங்களை சேர்ந்த 1,082 பறவைகளும், பூவலம்பேட்டில் 37 இனங்களை சேர்ந்த 1,447 பறவைகளும், பெரியப்புலியூரில் 36 இனங்களை சேர்ந்த 1,036 பறவைகளும், கண்ணன்கோட்டையில் 34 இனங்களை சேர்ந்த 925 பறவைகளும், மாநெல்லூரில் 34 இனங்களை சேர்ந்த 929 சதுப்பு நில வாழ் பறவைகளும், தாணிப்பூண்டியில் 35 இனங்களை சேர்ந்த 869 சதுப்புநில வாழ்  பறவைகளும் கணக்கெடுக்கப்பட்டது. இதன் மூலம் 6 பகுதிகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 39 பறவை இனங்களை சேர்ந்த 6,288 நில வாழ் பறவைகள் கணக்கெடுக்கப்பட்டன.

Tags : Kummidipoondi , A bird survey in the forest area at Kummidipoondi
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே நிபந்தனை...