×

சட்ட நடைமுறைகளை கொச்சைப்படுத்தி கைது: சிசோடியாவை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: சட்ட நடைமுறைகளையும், 70 ஆண்டு பழமையான நமது அரசியல் சட்டத்தின்  அடிப்படை கொள்கைகளையும் கொச்சைப்படுத்தி கைது செய்யப்பட்டுள்ள மணீஷ்  சிசோடியாவை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டது குறித்து, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம்: வேறுபட்ட கொள்கைகளும் பல்வேறு அரசியல் கட்சிகளும்தான் இந்திய ஜனநாயகத்தின் இதயத்துடிப்பு என்பதை தாங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன். அதேபோல, சட்டத்தின் ஆட்சியும் தனிமனித சுதந்திரமும் நமது குற்றவியல் நீதிமுறையின் அடித்தளமாகும்.
அப்படியிருக்கையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவை இட்டுக்கட்டிய குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்து, அரசியல் சட்டம் உத்தரவாதம் அளிக்கும் தனிநபர் சுதந்திரத்தை மீறி அவருக்கு வலியையையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியிருப்பது வேதனையும் ஏமாற்றமும் அளிக்கிறது. குற்றவியல் நீதிமுறையின் அனைத்து விதிகளும் காற்றில் பறக்கவிடப்பட்டிருப்பதுடன், ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பவர்களின் தனிப்பட மனநிறைவுக்காக மீறப்பட்டிருக்கின்றன. எதிர்க்கட்சி தலைவர்கள் மீது சோதனைகள் நடத்துவது, கட்சித் தாவல் தடைச்சட்டத்தை அப்பட்டமாக மீறி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்ப்பது, எதிர்க்கட்சி தலைவர்களையும், பாஜாவுக்கு தொந்தரவாக இருக்கும் தலைவர்களையும்

கைது செய்யப் புலனாய்வு அமைப்புகளை ஆணவத்துடன் ஏவி விடுவது போன்ற அராஜகங்கள் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதாக மட்டுமல்லாமல், நெருக்கடி நிலை காலத்தை நினைவூட்டுபவையாகவும் அமைந்துள்ளன.புலனாய்வு அமைப்புகளையும் ஆளுநர் உள்ளிட்ட அரசியல் சட்டப் பதவிகளையும் தவறாக பயன்படுத்துவது இந்தியாவின் துடிப்பான மக்களாட்சியை வலுப்படுத்த ஒருபோதும் உதவாது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். உரிய சட்ட நடைமுறைகளை மீறி மணீஷ் சிசோடியா கைது செய்த நாளானது ஒன்றிய பாஜ அரசின் ஆட்சிக்காலத்தின் கருப்பு நாளாகவே நினைவில் கொள்ளப்படும்.

ஆகவே, கடந்த ஒன்பது ஆண்டு ஒன்றிய பாஜ ஆட்சியில் நாட்டின் முதன்மையான புலனாய்வு அமைப்புகள் மற்றும் ஆளுநர் முதலிய அரசியல் சட்டப் பதவிகளுக்கென்று எஞ்சியிருக்கும் மாண்பை காப்பாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். மேலும், சட்ட நடைமுறைகளையும், 70 ஆண்டு பழமையான நமது அரசியல் சட்டத்தின் அடிப்படை கொள்கைகளையும் கொச்சைப்படுத்தி கைது செய்யப்பட்டுள்ள மணீஷ் சிசோடியா நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்.


Tags : Sisodia ,Chief Minister ,MK Stalin ,PM , Arrested in contempt of legal process: Sisodia should be released unconditionally: Chief Minister MK Stalin urges PM
× RELATED டெல்லி கலால் கொள்கையில் கெஜ்ரிவால்,...