×

ஜாதி, மத கலவரத்தை தூண்டி திமுக ஆட்சியை அகற்ற சதி: நாகர்கோவிலில் கலைஞர் சிலையை திறந்துவைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

நாகர்கோவில்: திராவிட மாடல் ஆட்சியின் சாதனையை பொறுத்துக்கொள்ள முடியாமல், மக்களிடத்தில் பிளவு ஏற்படுத்த, ஜாதி, மத கலவரத்தை தூண்டி திமுக ஆட்சியை அகற்ற சதி நடக்கிறது என்று நாகர்கோவிலில் நடந்த கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராக பதவி வகித்து  எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திய கலைஞருக்கு, குமரி மாவட்டத்தில் முதல்முறையாக முழு உருவ வெண்கல சிலை  நாகர்கோவில், ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட திமுக அலுவலக வளாகத்தில்  நிறுவப்பட்டுள்ளது. இதனை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, திமுக கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்த கலைஞர், பேராசிரியர் அன்பழகன் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 22 மாதங்களில், நாம் இந்த சமுதாயத்திற்கு, தமிழகத்துக்கும், மக்களுக்கும் ஆற்றியிருக்கும் அரும்பணிகள், எல்லோரும் போற்றும் வகையில் அமைந்திருக்கிறது என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. நம்முடைய ஊனோடும் உயிரோடும் கலந்திருக்கின்ற முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரின் திருவுருவச்சிலையை, இந்த மாவட்டக் கழக அலுவலகத்தில் திறந்து வைக்கும் ஒரு சிறப்பான வாய்ப்பு கட்சியின் தலைவர் என்கிற முறையில் எனக்கு வழங்கப்பட்டு அந்தப் பொறுப்பை நான் நிறைவேற்றியிருக்கிறேன். கலைஞரின் திருவுருவச் சிலையை,  நாம் நாடு முழுவதும் ஆங்காங்கு தொடர்ந்து திறந்து வைத்துக் கொண்டிருக்கிறோம்.   இந்தச் சிலையை திறந்து வைத்திருக்கும் நேரத்தில், நான் உங்களை எல்லாம் கேட்டுக் கொள்ள விரும்புவது, ‘எந்த லட்சியத்திற்காக தலைவர் கலைஞர், அறிஞர் அண்ணா பாடுபட்டு இருக்கிறார்களோ, அந்த லட்சியத்தை மனதில் ஏற்று நாம் நம்முடைய கடமையை ஆற்றிட வேண்டும்’ என்பதுதான்.  ஆட்சியில் இருந்தாலும்,  இல்லை என்றாலும் நாம் நம்முடைய கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு நம்மைப் பார்த்து பாராட்டக் கூடியவர்கள், வாழ்த்த கூடியவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். .  


அதேநேரத்தில், இன்றைக்கு நாட்டைப் பிளவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு உலவிக் கொண்டிருக்கும் சிலர், இந்த ஆட்சி இப்படி செயல்பட்டு கொண்டிருக்கிறதே, ‘திராவிட மாடல்’ என்று சொல்லி தமிழ்நாட்டு மக்களின் உள்ளத்தில் ஒரு கவர்ச்சிகரமான, மக்களை கவரும் வகையில் ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்களே, எனவே தொடர்ந்து இந்த ஆட்சியை விட்டால் நம்முடைய பிழைப்பு என்னாவது என்ற நிலையில் நம்மீது புழுதி வாரித் தூற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சிக்கு எப்படியாவது கெடுதல் செய்து, இந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை எல்லாம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். எங்காவது கலவரத்தை ஏற்படுத்தலாமா. ஜாதிக் கலவரத்தை தூண்டலாமா. மதக் கலவரத்தை ஏற்படுத்தலாமா. ஆங்காங்கே இருக்கும் மக்களிடத்தில் பிளவுகளை ஏற்படுத்தலாமா என்றெல்லாம் திட்டமிட்டு அந்தக் காரியத்தில் இன்றைக்கு அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். நான் உங்களை எல்லாம் கேட்டுக் கொள்ள விரும்புவது, விரைவில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.  அதில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஒரு சிறப்பான கூட்டணியை நாம் அமைத்து  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை அமைத்து, நாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே வெற்றியைத் தொடங்கி, ஆட்சிக்கு வந்ததற்கு பிறகும் அந்த வெற்றியை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கிறோம்.  இதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

நான் 1ம் தேதி நந்தனத்தில் நடந்த என்னுடைய பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசுகிறபோது, பல்வேறு மாநிலத்தின் தலைவர்கள் எல்லாம் வைத்துக் கொண்டு நான் சொன்னேன், ‘நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறது.  கூட்டணி சிறப்பாக இருக்கிறது. அதனால்தான் தொடர்ந்து நாங்கள் வெற்றி பெறுகிறோம். நாம் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும்’ என்று வேண்டுகோளை எடுத்து வைத்தேன். அதைத்தான் நான் தொடர்ந்து எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறேன். அதை நீங்கள் செய்தீர்கள் என்றால் நிச்சயமாக இன்றைக்கு நாம் தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையும் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்பதைத் தெளிவாக சொன்னேன்.  தலைவர் கலைஞர் சிலையைத் திறந்து வைத்தால் மட்டும் போதாது. கலைஞர் எதற்குப் பாடுபட்டாரோ, எதற்கு பணியாற்றினாரோ, எதற்காக உழைத்தாரோ, என்ன லட்சியத்தை நமக்கு கற்றுக் கொடுத்தாரோ, அதை மனதில் ஏற்றுக்கொண்டு நாம் அந்தப் பணியை நிறைவேற்றினால்தான், அந்த சிலையைத் திறந்து வைத்ததற்கு உள்ளபடியே நாம் மரியாதை செலுத்துவதாக அமைந்திட முடியும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, மனோதங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், திமுக தணிக்கை குழு உறுப்பினர் சுரேஷ்ராஜன், மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்எல்ஏ ஆஸ்டின் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

*‘கலைவாணர் மாளிகை’ திறப்பு நாகர்கோவில் மாநகராட்சிக்கு புதியதாக ரூ.10.50 கோடியில் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு கலைவாணர் மாளிகை என் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த மாநகராட்சி புதிய கட்டிட மாதிரியை பார்வையிட்ட முதல்வர், நாகர்கோவில் வடசேரி ஆம்னி பஸ் நிலையத்தின் மாதிரி, வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலைய மாதிரி போன்றவற்றையும் பார்வையிட்டார். பின்னர் மாமன்ற உறுப்பினர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.  

* குமரி மண்ணில் கலைஞர் சிலை: மு.க.ஸ்டாலின் டிவிட் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவு: வானுயர வள்ளுவருக்கு கலைஞர் சிலை எடுத்த குமரி மண்ணில், தமிழின தலைவர் கலைஞரின் திருவுருவ சிலையை திறந்து வைத்தேன். நவீன தமிழ்நாட்டை கட்டியெழுப்ப அவர் செலுத்திய உழைப்பையும் தமிழ் நிலத்தில் அவர் செய்த சாதனைகளையும் காலத்துக்கும் எடுத்துச் சொல்லும் சின்னம்தான் அவரது சிலைகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


* சிற்பிக்கு தங்க மோதிரம் விழாவில் கலைஞர் சிலையை வடிவமைத்த சிற்பி தீனதயாளனுக்கு தங்க மோதிரம் மற்றும்  சால்வை அணிவித்து முதல்வர் பாராட்டினார். கிழக்கு மாவட்ட திமுக செயலாளர்  மேயர் மகேஷ் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ‘கோபாலபுரம் இல்லம்’ வடிவில்  நினைவு பரிசு வழங்கினார்.



Tags : DMK ,Chief Minister ,M.K.Stal ,Nagercoil , Conspiracy to oust DMK rule by inciting caste and religious riots: Chief Minister M.K.Stal's speech while inaugurating the artist's statue at Nagercoil
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...