×

ஈரோடு ஜவுளி சந்தையில் கோடை கால ஆடைகள் விற்பனை தீவிரம்

ஈரோடு: ஈரோடு ஜவுளி சந்தையில் கோடை கால ஆடைகளை விற்பனை இந்த வாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஈரோடு மாநகரில் ஜவுளி சந்தை வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்கிழமை வரை நடைபெறும். இந்த சந்தை ஈரோடு திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி, கனி மார்க்கெட், பழைய சென்ட்ரல் தியேட்டர் பகுதியில் வாரந்தோறும் நடைபெறும். இந்த சந்தைக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் மொத்த வியாபாரிகள் அதிகளவில் வந்து ஜவுளி ரகங்களை மொத்தமாக கொள்முதல் செய்து செல்வர்.

அதேபோல், ஈரோடு மற்றும் சுற்றுப்புற மாவட்டத்தை சேர்ந்த  மக்கள் சில்லரை விலையில் ஆடைகளை கொள்முதல் செய்து செல்வது வழக்கம். கோடை கால சீசன் துவங்கி விட்டதால், ஜவுளி சந்தையில் காட்டன் ஆடைகளான லுங்கி, வேஷ்டி, சேலை, கவுன், பனியன், கைக்கூட்டை போன்ற ரகங்கள் விற்பனைக்கு  குவித்து வைத்திருந்தனர். அதேபோல், கோயில் சீசனும் துவங்கி விட்டதால் பக்தர்களுக்கு தேவையான மஞ்சள் நீற சேலை, வேஷ்டி, துண்டு போன்ற ரகங்களும்  விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று கூடிய சந்தையில் மொத்த விற்பனை மந்தமாக காணப்பட்ட நிலையிலும், சில்லரை விற்பனை விறுவிறுப்பாக  நடைபெற்றது. இது குறித்து ஜவுளி சந்தை (கனிமார்க்கெட்) வியாபாரி கூறியதாவது: தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்வு செய்யப்பட்டதையடுத்து,   கோடை  கால சீசன் துவங்கி விட்டதால், காட்டன் ரக ஆடைகள் விற்பனை அதிகரித்துள்ளது. அதேபோல், கோயில் சீசனையொட்டி, சேலம் மாவட்டம் இளம்பிள்ளை, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போன்ற பகுதிகளில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட மஞ்சள் நீற சேலை, வேஷ்டி போன்ற ஆடைகளை பக்தர்களுக்காக விற்பனைக்கு வைத்துள்ளோம்.

இன்று கூடிய சந்தையில் மொத்த வியாபாரம் எதிர்பார்த்த அளவுக்கு நடைபெற வில்லை. ஆனால், சில்லரை விற்பனையில் பொதுமக்கள் அதிகளவில்  காட்டன் ரக ஆடைகளை வாங்கி சென்றனர். கோயில் சீசன் ஆடைகளின் விற்பனையும் சூடுபிடிக்க துவங்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Erode , Sales of summer clothes are brisk in the Erode textile market
× RELATED ஈரோடு கிழக்கு, மேற்கு சட்டமன்ற தொகுதிகளில் குறைந்தளவு வாக்குப்பதிவு