×

ஒன்றிய அரசு போட்டித் தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்கள் பங்கேற்க பயிற்சி பிரிவு: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: ஒன்றிய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற்று ஒன்றிய அரசுப் பணிகளில் சேர வேண்டும் என்பதற்காகத்தான் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வு பயிற்சி பிரிவு தொடங்கி வைக்கப்படுகிறது. இதை தமிழ்நாட்டு மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தொழிலாளர் மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக போட்டித் தேர்வு பயிற்சிப் பிரிவு தொடக்க விழா, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் நடந்தது.

இந்த விழாவில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வேலைவாய்ப்பு பயிற்சித்துறை அமைச்சர் கணேசன், ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டித் தேர்வு பயிற்சி பிரிவை தொடங்கி வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: ஒன்றிய அரசின் போட்டித் தேர்வுகள், பல்வேறு படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் ஆகியவற்றில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று சிறப்பாக எழுதுவதற்கான ஊக்கம் மற்றும் வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு அளிக்க தொடங்கப்பட்டதுதான் நான் முதல்வன் திட்டம்.

இந்த திட்டம் தொடங்கப்பட்டு தற்போது 1 ஆண்டு முடிந்து இரண்டாம் ஆண்டில் நுழைகிறோம். இப்போது அதன் பிரிவாக பயிற்சி பிரிவை தெ ாடங்கி வைக்கிறேன். இதுஎனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த திட்டம் மட்டும் அல்லாமல் பள்ளி மாணவர்களுக்கான திட்டங்களில் 1-5 வகுப்பு படிக்கின்ற குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், புதுமைப் பெண் திட்டம், மகளிருக்கு பேருந்துகளில் கட்டணம் இல்லா திட்டம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த 20 மாதங்களில் இலவச பேருந்து பயணத்திட்டத்தின் கீழ் 258 கோடி பெண்கள் பயணம் செய்துள்ளனர்.

அதேபோல பள்ளி மாணவர்கள் படித்ததும் வேலை வாய்ப்பு பெற வசதியாக நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் இலக்கு ஆண்டுக்கு 10 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற ஏற்பாடு செய்வதுதான். 483 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் 4 லட்சத்து 60 ஆயிரத்து 734 மாணவ மாணவியர், அதேபோல 750 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கின்ற 8லட்சத்து 54 ஆயிரம் மாணவ மாணவியருக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒன்றிய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ்நாடு மாணவர்கள் பங்கேற்பது மிகவும் குறைவாக இருக்கிறது.

அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டு அதில் 1 லட்சத்து 50 ஆயிரம் வேலை வாய்ப்புகள் இருப்பதாக அறிவித்தும்  தமிழ்நாட்டு மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்கவில்லை. இந்த நிலையை மாற்றி அமைக்கத்தான்  இந்த பயிற்சி திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. நான் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசும் போது, ஒன்றிய அரசு அலுவலகங்களில், நிறுவனங்களில் உள்ள பணியிடங்களில் தமிநாட்டு மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அதற்கு ஏற்ப நாமும் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி  மையங்கள் அதிக அளவில் சென்னையில் தான் உள்ளன. அவற்றில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதை கிராமப்புற மாணவர்களால் செலுத்தி படிக்க முடியாத நிலை உள்ளது. அதனால்  தான் கட்டணமின்றி பயிற்சி அளிக்க அரசு சார்பில் இந்த பயிற்சிப் பிரிவு தொடங்கி வைக்கிறோம். இதை மாணவ மாணவியர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு மாணவர்கள் ஒன்றிய அரசுப் பணிகளில் சேர வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு என்னால் முடிந்த அனைத்து பணிகளையும் செய்வேன்.

உதவிகளையும் செய்வேன். உழைத்தான்  முடியும் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி. மாணவர்களின் சொத்து கல்விதான் அதை யாராலும் பிரிக்க முடியாது. உங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் இந்த அரசு துணை நிற்கும். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Tags : Tamil Nadu ,Udhayanidhi Stalin , Coaching Section for Tamil Nadu Students to Participate in Union Government Competitive Examination: Speech by Udhayanidhi Stalin
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...