மருத்துவமனைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்; நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்: மஸ்தூர் பணியாளர்கள் பற்றாக்குறை தீர்க்கப்படுமா?

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. 3 மாவட்டங்களிலும் போதிய மஸ்தூர் பணியாளர்கள் இல்லாததால், சுகாதார பணிகளை மேற்கொள்ள முடியாமல் ஊழியர்கள் தவிக்கின்றனர். குளிர்காலம் முடிந்து கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஒருவிதமான காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பிரதான மருத்துவமனைகளில் சமீபகாலமாக காய்ச்சல் பரிசோதனை என்ற பெயரில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி, கண் எரிச்சல் உள்ளிட்ட அறிகுறிகளோடு பலர் வெளிநோயாளியாக சென்று சிகிச்சை பெற்று செல்கின்றனர். சிலர் வறட்டு இருமல், உடல் சோர்வு உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டியும் மாத்திரை, மருந்துகளை பெற்று செல்கின்றனர். 3 மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகமாக இருப்பினும், மருத்துவமனைகளில் அவற்றை வெளியே சொல்ல தயங்குகின்றனர். சாதாரண காய்ச்சல் என பொதுமக்களை உள்நோயாளிகளாக அனுமதித்து, டெங்கு காய்ச்சலுக்கான மாத்திரை, மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. தனியார் லேப்களிலும் காய்ச்சல் பரிசோதனைக்கு கூட்டம் அலைமோதி வருகிறது. வாரக்கணக்கில் தொண்டை வலியால் அவதியுறுவோரும் தற்போது அதிகரித்துவருகின்றனர்.

இந்நிலையில் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறையிடம் போதிய மஸ்தூர் பணியாளர்கள் இல்லை. 3 மாவட்டங்களிலும் சுகாதார துறையினர் டெங்கு புழுவை கட்டுப்படுத்த போதிய மஸ்தூர் பணியாளர்கள் வேண்டும் என கேட்டு வரும் நிலையில், குறைந்தளவு பணியாளர்களே ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றனர். சமீபகாலமாக மஸ்தூர் பணியாளர்கள் ஒவ்வொரு தாலுகாவிற்கும் மாதம்தோறும் நியமிக்கப்பட்டு வருகின்றனர். நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மார்ச் மாத கணக்கீட்டின்படி அம்பை, மானூர், நாங்குநேரி, பாளையங்கோட்டை, பாப்பாக்குடி, ராதாபுரம், வள்ளியூர் ஆகிய 7 தாலுகாவிற்கும் தலாக 20 பேரும், சேரன்மகாதேவி மற்றும் களக்காடு தாலுகாவிற்கு தலா 12 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் முதலே சுகாதாரத்துறை சார்பில் ஒரு தாலுகாவிற்கு 60 மஸ்தூர் பணியாளர்கள் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு தாலுகாவிற்கு 20 மஸ்தூர் பணியாளர்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுவதால், கொசு ஒழிப்பு பணிகளை முழுமையாக மேற்கொள்ள முடிவதில்லை. குறிப்பாக நெல்லை ஒட்டியுள்ள ரெட்டியார்பட்டி வட்டார மருத்துவமனைக்கு உட்பட்டு முன்னீர்பள்ளம், பர்கிட்மாநகர், ராஜவல்லிபுரம், மேல திருவேங்கடநாதபுரம், கீழநத்தம் என 5 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. பாளை தாலுகாவிற்கு 20 மஸ்தூர் பணியாளர்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 4 பணியாளர்களை வைத்தே அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டியதுள்ளது.

சில ஊராட்சிகள் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் தொகையை கொண்டிருக்கும் சூழலில், 4 மஸ்தூர் பணியாளர்களை வைத்து கொண்டு லார்வா புழுக்கள் ஒழிப்பு, புகை மருந்து அடித்தல், சிரட்டை, பிளாஸ்டிக் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காவண்ணம் பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடிவதில்லை.

எனவே சமீபகாலமாக வேகமாக பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதார துறையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சுகாதார துறைக்கு தேவையான மஸ்தூர் பணியாளர்களை ஒதுக்கீடு செய்தால் மட்டுமே, கொசு ஒழிப்பு பணிகள் வேகமெடுக்க வாய்ப்புள்ளது.

Related Stories: