×

டியாகோ கார்சியா அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 16 இந்திய மீனவர்களையும், படகையும் விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!

சென்னை: டியாகோ கார்சியா அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 16 இந்திய மீனவர்களையும், படகையும் விடுக்க நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில்; தமிழ்நாட்டின் தேங்காப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 16 இந்திய மீனவர்கள் (தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள், கேரளாவைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள்) 09.02.2023 அன்று பதிவு எண். IND-TN-15-MM-3793-ல் “புனித மேரி” என்ற பெயர் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றதாகவும், அம்மீனவர்கள் 23.02.2023 அன்று ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் (BIOT) டியாகோ கார்சியா அதிகாரிகளால் விசைப்படகுடன் கைது செய்யப்பட்டனர் என்பதையும் குறிப்பிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியப் பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இப்பகுதி மீனவர்கள், மீன்பிடி தொழிலை மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாக நம்பியுள்ள நிலையில், இக்கைது சம்பவம் அவர்களின் குடும்பங்களுக்கு மிகுந்த இன்னல்களை ஏற்படுத்துமென்று தமிழ்நாடு முதலமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். எனவே, இந்திய வெளியுறவு அமைச்சகம், தூதரக வழிமுறைகள் மூலமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இச்சம்பவத்தினை எடுத்துச் சென்று, கைது செய்யப்பட்ட 16 இந்திய மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் விடுவித்திட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக்கொண்டுள்ளார்.


Tags : Diego Garcia ,Chief Minister ,M.K.Stal , Action should be taken to release the 16 Indian fishermen and the boat arrested by the Diego Garcia authorities: Chief Minister M.K.Stal's letter to the Prime Minister..!
× RELATED வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும்...